அரசுத் துறை வாகனங்களுக்கான பதிவுக்காலம் நீட்டிப்பு..

 
govt

தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலான அரசுப் பேருந்துகள் மற்றும் அரசுத் துறை சார்ந்த வாகனங்களுக்கான பதிவுச் சான்று செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை பயன்படுத்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தடை விதித்தது. இத்தகைய வாகனங்களுக்கான பதிவுச்சான்றை வாகன் இணையதளம் வாயிலாக ரத்து செய்தும் அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருந்தது.  

old vehicles

எனவே, அத்தியாவசிய சேவைகள் தடைபடுவதைத் தடுக்கும் வகையில் 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை மேலும் ஓராண்டு பயன்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது. அந்த அனுமதி வரும் 30ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை மேலும் ஓராண்டு பயன்படுத்த அனுமதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தைப் பொருத்தவரை அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் உட்பட 15 ஆண்டுகளுக்கு மேலாக  6,247 பயன்பாட்டில் வாகனங்கள் உள்ளன. இவற்றின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்யும்பட்சத்தில் ஏராளமானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் உட்பட அரசுத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான 15 ஆண்டுகளுக்கு மேலான 6,247 வாகனங்களுக்கு வரி, கட்டணம் போன்றவற்றை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நேரடியாக வசூலித்து, பதிவுச் சான்றை புதுப்பித்து வழங்கலாம் என்றும், அந்த வாகனங்களின் பதிவுச்சான்று செல்லுபடியாகும் காலத்தை அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்படுவதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.