கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி பயணிக்கும் ஹெலிகாப்டரை இயக்கி ஒத்திகை
பிரதமர் நரேந்திரமோடி கங்கைகொண்ட சோழபுரம் வருகை தருவதை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. கங்கைகொண்ட சோழபுரம் ஹெலிபேட் மைதானத்தில் MI 17 இரக ஹெலிகாப்டர் வந்திறங்கி ஒத்திகை முன்னோட்டம் நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை தமிழகம் வருகிறார். தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் நாளை இரவு 10:30 மணியளவில் திருச்சி விமான நிலையத்திற்கு வந்திறங்கும் பிரதமர் அங்கு தனியார் நட்சத்திர விடுதியில் தங்குவதாக கூறப்படுகிறது. பின் மறுநாள் காலை மீண்டும் திருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கங்கைகொண்ட சோழபுரம் வருகை தந்து மாமன்னன் இராசேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித்திருவாதிரை விழா உள்ளிட்ட முப்பெரும் விழாவில் பங்கேற்கிறார். இதில் சைவ சித்தாந்த மடங்களைச் சேர்ந்த மடாதிபதிகளும் பங்கேற்கின்றனர். மேலும் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

பின்னர் நிகழ்ச்சி முடிந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து புறப்பட்டு, திருச்சி விமான நிலையம் செல்லும் மோடி அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்லவுள்ளார். பிரதமரின் வருகையை ஒட்டி கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள குருவாலப்பர் கோவில் கிராமத்தில் விவசாய நிலம் ஒன்றில் ஹெலிபேடு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இன்று பாதுகாப்பு ஒத்திகை மற்றும் ஹெலிகாப்டரை வந்து இறக்கி சோதனை முன்னோட்டம் நடத்தப்பட்டது. ஹெலிபேட் மைதானத்தில் SPG பாதுகாப்பு படையினர், தமிழ்நாடு காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பிரதமர் மோடி வருகையை ஒட்டி ஹெலிகாப்டர் மைதானம், அவர் செல்லும் சாலை மார்க்கம், கங்கைகொண்ட சோழபுரம் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்புகள் போடப்பட்டு தீவிர கண்காணிப்பு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


