"வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு நிவாரண உதவி தொகையை வழங்குக" - சசிகலா

 
sasikala

தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவி தொகையை விரைந்து வழங்கிட சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

sasikala

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளன. மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை நின்று நான்கு நாட்களுக்கு மேலாகியும் இன்று வரை மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்து போயுள்ளது. இதன் காரணமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி மிகவும் துன்பப்படுகின்றனர். இந்த அளவுக்கு மக்கள் பாதிப்புக்குள்ளானதற்கு திமுக தலைமையிலான அரசு தான் காரணம். மேலும், நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ளாமல், பாதிக்கப்பட்ட மக்களை காக்க தவறிய திமுக தலைமையிலான அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் இன்னும் அநேக இடங்களில் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீர், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்கப்பெறாமல் பரிதவிக்கிறார்கள். வீடுகளில் வெள்ள நீர் புகுந்து அருகில் உள்ள பள்ளிகளில் தங்கியவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட தங்களுக்கு கிடைக்கவில்லை என்று சொல்லி மக்கள் மிகவும் வேதனைப் படுகிறார்கள். சென்னையில் பல இடங்களில் தேங்கிய மழைநீருடன் கழிவு நீரும் கலந்து அப்படியே அகற்றப்படாமல் இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் குப்பை கழிவுகள் அப்படியே கிடக்கிறது. பல இடங்களில் கால் நடைகள் இறந்து அகற்றப்படாமல் இருக்கிறது. ஒரு சில இடங்களில் தண்ணீர் வடியாததால் மின்சார வசதியும் இல்லாமல் மக்கள் இருளில் மூழ்கி உள்ளனர். மழையின் போது பல இடங்களில் முறிந்து விழுந்த மரங்கள் அகற்றப்படாமல் இன்றைக்கும் அப்படியே கிடக்கிறது. இதுபோன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை ஆரம்பிக்காமல் திமுக தலைமையிலான அரசு மெத்தனமாக இருந்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. 

sasikala

மேலும், மிக்ஜாம் புயல் தாக்கத்தால் இதுவரை 23 நபர்களுக்கு மேல் பலியாகியிருப்பதாக பல ஊடங்கங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் திமுக தலைமையிலான அரசு உண்மையில் பலியானவர்கள் எத்தனை நபர்கள்? என்பதை தெரிவிக்காமல் மூடி மறைப்பது மிகவும் கணடனத்திற்குரியது. இதில் உயிரிழந்த குடும்பத்தினர்கள் அனைவருக்கும் உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளும் உடனே அளிக்கப்பட்டன. குடிநீர் தேவைப்படும் பகுதிகளில் லாரிகளில் குடிநீர் எடுத்து சென்று விநியோகம் செய்யப்பட்டது. உணவு, பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. வெள்ளப்பாதிப்புகள் சீரடையும் வரை அம்மா உணவகத்தில் மக்களுக்கு இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டது. தன்னார்வலர்களை பெருமளவுக்கு ஒருங்கிணைத்து மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அனைவருக்கும் கொண்டு சேர்த்தனர். மேலும், வெள்ள நீர் சூழ்ந்து வீடுகளில் இருந்து வெளியே வர இயலாத பெண்களுக்கு நாப்கின்கள் 

sasikala

லவசமாக வழங்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் 36,840 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. அதே நேரத்தில், சென்னை மாநகரத்தில் வெள்ளத்திற்குப் பின் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்துவதற்காக மாபெரும் துப்புரவுப் பணியும் மேற்கொள்ளப்பட்டது. மொத்த மாநில நிர்வாகமும் இரவு பகலாக உழைத்தது என்பதை இன்றைய ஆட்சியாளர்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.மதிநுட்பம் மிக்க புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையின் கீழ் செயல்பட்ட அன்றைய அரசு வெள்ளம் பாதித்த பகுதிகளில் மிகக் குறுகிய காலத்திற்குள் மீண்டும் இயல்பு நிலையைக் கொண்டு வந்தது. 

மேலும், கடந்த 2015 வெள்ளத்தின்போது சேதமான, பட்டா, கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டைகள், எரிவாயு இணைப்பு அட்டைகள், ஆதார் அடையாள அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், வங்கிக் கணக்குப் புத்தகங்கள், விற்பனைப் பத்திரங்கள் போன்ற ஆவணங்களின் நகல்களை வழங்குவதற்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. பாதிப்படைந்த பகுதிகளில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கூடுதல் சீருடைத் தொகுப்புகள் இலவசமாக வழங்கப்பட்டன. பெருமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை சரி செய்வதற்காக 8,481 கோடி ரூபாய் நிதியுதவி கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பிறகு 1,000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியது. அதே சமயம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மத்திய அரசு நிதியை எதிர்பார்த்து காத்திருக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் விரைந்து நிறைவேற்றப்பட்டன. ஆனால் இன்றைக்கோ திமுக தலைமையிலான அரசு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அளிக்கவேண்டிய உணவை கூட மத்திய அரசு நிதியை பெற்றவுடன் அளிக்கலாம் என்று காத்திருப்பதாகத்தான் தெரிகிறது. 

தமிழகத்தில் உள்ள வெள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு மத்திய அரசு முதற்கட்டமாக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.450 கோடியையும், சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து ரூ.561.29 கோடியையும் தற்போது மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்த நிதியையாவது எந்தவித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் முறையாக செலவிடுங்கள். மத்திய அரசை குறை கூறிக் கொண்டு இருந்தால் மட்டும் போதுமா? மத்திய அரசின் மீது ஏதாவது பழியை போட்டுவிட்டு திமுகவினர் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். தமிழக மக்களை காப்பாற்றுகிற பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்குத்தான் இருக்கிறது. ஆனால் இன்றைக்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதில் திமுக தலைமையிலான அரசு முற்றிலும் தோல்வி அடைத்துவிட்டது. 

sasikala

மேலும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியின் போது மழைவெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான குடிசைகளில் வசித்த குடும்பங்களுக்குத் தலா 5,000 ரூபாய் நிவாரணமாக வழங்கியது. மேலும், வீடுகளில் வெள்ளம் புகுந்து, உடைகள், பாத்திரங்கள் போன்ற தனிப்பட்ட உடமைகள் பாதிக்கப்பட்டிருந்தால் அந்தக் குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது. குடிசைகளில் வாழும் குடும்பங்களுக்கு, குடிசைகள் பாதிக்கப்பட்டு வெள்ளமும் புகுந்திருந்தால், மொத்தமாக 10,000 ரூபாயை நிதியுதவியாக அன்றைக்கு வழங்கப்பட்டது. மேலும் நிவாரண உதவியானது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாகச் சேரும் வகையில் அவர்களது வங்கிக் கணக்குகளிலேயே வழங்கப்பட்டது. 

ஆனால், இன்றைய திமுக தலைமையிலான ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் படும் கஷ்டங்களை பார்க்கவே மிகவும் வேதனையாக இருக்கிறது. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகளுக்கேற்ப தமிழக மக்கள் அனைவரும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்த கடினமான நேரத்தில் இன்றைக்கு நம்மோடு இல்லையே என்று சொல்லி மிகவும் ஏங்கி தவிக்கிறார்கள். 

எனவே, திமுக தலைமையிலான அரசு ஐந்து நாட்களாகியும் மழை நீர் வடியாமல் தேங்கியுள்ள பகுதிகளில் உள்ள வெள்ள நீரை ராட்சத மின் மோட்டார்களை வைத்து போர்க்கால அடிப்படையில் விரைந்து அகற்ற வேண்டும். ஆங்காங்கே முறிந்து விழுந்த மரங்கள், தேங்கியுள்ள குப்பைகளை விரைந்து அகற்ற வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை ஏதோ கண் துடைப்புக்காக நடத்துவது என்று இல்லாமல், மக்களுக்கு மிகவும் பயனளிக்கின்ற வகையில் முறையான மருத்துவ முகாம்களை நடத்துவதன் மூலம் தொற்று நோய் பரவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் போனவர்களுக்கு உடனே வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் உடனே மின்சாரம் வழங்க வேண்டும். மேலும் தற்போது செலுத்தவேண்டிய மின்கட்டணத்தை தாமதமாக செலுத்துவதற்கு குறைந்தது இரண்டு மாதங்களாவது அனுமதி அளிக்க வேண்டும். மேலும், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சியில் 8 ஆண்டுகளுக்கு முன்னரே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை நிவாரண உதவி தொகையாக வழங்கப்பட்டதை எண்ணிப்பார்த்து இன்றைய தேதியில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை கருத்தில் கொண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதலாக நிவாரண உதவி தொகை வழங்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.