"நிவாரண நிதியை ரொக்கமாக தராமல் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்" - எல்.முருகன்

 
L.Murugan

முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதால் நிவாரண நிதியை ரொக்கமாக தராமல் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று  எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மிக்ஜாம் புயல், கனமழை, வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பள்ளிக்கரணை, வேளச்சேரி, வரதராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் மழை பாதிப்பில் இருந்து மக்கள் இன்னமும் முழுமையாக மீண்டு வரவில்லை. திருநின்றவூர், நசரத்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் இன்னமும் வடியாத சூழல் உள்ளது.

l murugan

பள்ளிகள் திறந்துள்ள நிலையில், மாணவ-மாணவியர் படகுகளில் பள்ளிக்குச்செல்லும் அவலநிலையும் உள்ளது. இதனால், தமிழக அரசு சென்னை மட்டுமில்லாமல், மற்ற 3 மாவட்டங்களிலும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு விரைந்து முடிக்க வேண்டும். நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு முதல் கட்ட நிதியை ஒதுக்கியுள்ளது. மழை - வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய குழு ஆய்வு செய்துள்ளது. இந்நிலையில், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண நிதி ரொக்கமாக வழங்கப்படும் என தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

L Murugan
அதேசமயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அதிகமாக இருப்பதால், கூடுதலாக நிதி வழங்க வேண்டும். மேலும், ரொக்கமாக கொடுத்தால் அதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவது தான் சரியாகும். குடும்ப அட்டை வைத்துள்ள பலருக்கு வங்கிக் கணக்கு இல்லை என்ற தமிழக அரசின் வாதத்தை ஏற்க முடியாது. ரொக்கமாக வழங்கினால் கண்டிப்பாக ஆளும் கட்சியினரின் இடையூறுகள் இருக்க வாய்ப்புண்டு. எனவே, நிவாரண தொகையை மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.