ரேணுகா தேவி அம்மையார் மறைவு : தலைவர்கள் இரங்கல்..!!
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவியும், அமைச்சர் சி.ஆர்.பி. ராஜாவின் தாயாருமான ரேனுகா தேவியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் : திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி எம்பியுமான திரு. திரு.டி.ஆர்.பாலு அவர்களின் மனைவியும், மாண்புமிகு தமிழக தொழில்துறை அமைச்சர் திரு. டி.,ஆர்.பி.ராஜா அவர்களின் தாயாருமான திருமதி. ரேணுகா தேவி அவர்கள் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அம்மையாரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க வேண்டிக்கொள்கிறேன். ஓம் சாந்தி!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் : திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு டி.ஆர். பாலு அவர்களின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்களின் அன்னையுமான திருமதி. ரேணுகா தேவி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
திருமதி ரேணுகாதேவி அவர்களை இழந்துவாடும் திரு.டி.ஆர் பாலு அவர்களுக்கும், திரு டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு மாமாவின் துணைவியார் - மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் சகோதரர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயார் ரேணுகாதேவி பாலு அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்த செய்தி அறிந்து வருந்தினோம். சென்னை தியாகராய நகரில் உள்ள அவர்களது இல்லத்துக்குச் சென்று, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோடு இணைந்து, அம்மையாரின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினோம். அம்மையாரை இழந்து வாடும் பாலு மாமா - ராஜா உள்ளிட்ட அவர்களது குடும்பத்தார் - நண்பர்கள் - உறவினர்களுக்கு ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்தோம்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் : திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலு அவர்களின் மனைவி ரேணுகாதேவி அவர்கள் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். திரு. டி.ஆர்.பாலு அவர்களின் பொதுவாழ்க்கைப் பணிகளுக்கு பின்னணியாக இருந்து உதவிய ரேணுகா தேவி அவர்களின் மறைவு திரு. டி.ஆர். பாலு அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. ரேணுகா தேவி அவர்களை இழந்து வாடும் டி.ஆர்.பாலு, புதல்வர் டி.ஆர்.பி. இராஜா உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் எம்.பி., கமல்ஹாசன் : திமுகவின் பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, நண்பர் திரு. டி.ஆர்.பாலு அவர்களின் மனைவி திருமதி. ரேணுகா தேவி இயற்கை எய்திய செய்தி துயரம் தருகிறது. திரு. பாலு அவர்களுக்கும், அவர்தம் மைந்தர், மாண்புமிகு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர், தம்பி திரு. டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கும், குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.


