ரேணுகா தேவி மறைவு : தலைவர்கள் நேரில் அஞ்சலி..!!
மறைந்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகா தேவி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி, நுரையீரல் பாதிப்பால் கடந்த சில நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயான ரேணுகா தேவி, இன்று காலை 10 மணியளவில் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருடைய மறைவு அரசியல் வட்டாரத்திலும் திமுக வட்டாரத்திலும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரேணுகாதேவியின் உடல் தற்போது சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். மேலும் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலினும் அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், நிதித் துறைச் செயலாளர் உதயச்சந்திரன், அமைச்சர்கள் கே.என். நேரு,தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மெய்யநாதன், நாசர், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். மேலும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அத்துடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். டி.ஆர். பாலுவின் மனைவி மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்...மறைந்த அம்மையார் ரேணுகா தேவியின் உடல் இன்று மாலை 5 மணியலவில் பெசண்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.


