பாஜகவுக்கும், ‘நாங்கள்தான் மாற்று’ என புதிதாக வருபவர்களுக்கும் பதிலடி..! - முதல்வர் ஸ்டாலின்..

 
Stalin Stalin

பாஜகவுக்கும், நாங்கள்தான் மாற்று என புதிதாக இளைஞர்களை ஏமாற்ற வருபவர்களுக்கும் நாம் பதிலடி கொடுக்க வேண்டும் என  திமுக பொதுக்குழுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மண்ணில் தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு தேவையான முடிவுகளை எடுக்கவும், தமிழ்நாட்டைச் சூழ்ந்து நிற்கும் பகையை எதிர்கொண்டு முறியடிக்க வியூகங்கள் அமைக்கவும் - வெற்றியை நோக்கி உழைக்கவும், இந்தப் பொதுக்குழுவை கூட்டியிருக்கிறோம். இங்கு கூடியிருக்கும் உங்களை பார்க்கும்போது, புது எனர்ஜி வருகிறது.

மதுரையில் 6 பொதுக்குழுக்கள் நடைபெற்றிருக்கிறது. இது 7வது பொதுக்குழு! ஏழாவது முறை கழகம் ஆட்சியமைக்க அடிகோலும் பொதுக்குழுதான் இது. வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மண்ணில், இந்த மாபெரும் பொதுக்குழுவை எழுச்சியுடன் ஏற்பாடு செய்திருக்கும் அமைச்சர் மூர்த்திக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள். 

அடுத்த ஆண்டு இந்த நேரத்தில் என்ன மாதிரி தலைப்புச் செய்தி வந்திருக்க வேண்டும் என்றால், “ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைத்தது. திமுக கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது!”. “இரண்டாவது முறையாக திராவிட மாடல் ஆட்சி தொடர்கிறது”. இதுதான் தலைப்புச் செய்தியாக இருக்க வேண்டும். அதுக்கான வியூகத்தை வகுக்கும் பொதுக்குழுதான் இது.

Stalin

 என்னைப் பொறுத்தவரைக்கும், பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம். சொல்லைவிட செயலே பெரிது. வரலாறு காணாத வெற்றியை நாம் பதிவு செய்வோம் என்று நான் சொல்வது, உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையில்தான்.  திமுக.வுக்கு என்றைக்கும் ஊடக சொகுசு இருந்ததில்லை. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகம் மேல்தான் அதிக விமர்சனங்கள் குவியும். ஆனால், திமுக ஆட்சிக்கு எதிரான அலையைவிட, ஆதரவு அலைதான் அதிகமாக வீசுகிறது. அது வெளியே தெரியாமல் மறைக்க - திசை திருப்ப சிலர் நினைக்கிறார்கள்.

பொருளாதாரரீதியான முட்டுக்கட்டைகள், அரசியல்ரீதியான முட்டுக்கட்டைகள், ஆளுநர் வழியாக முட்டுக்கட்டைகள், உரிமைகளை அபகரிக்கும் முட்டுக்கட்டைகள் என்று எத்தனை எத்தனையோ தடைகளை ஒன்றிய பாஜக அரசு போட்டாலும், அதை எல்லாம் கடந்து, இன்று இந்தியாவிலேயே வளர்ச்சியில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறோம்!

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள்தான் இருக்கிறது. அதனால், வழக்கத்தைவிட அதிகமாக, திமுகவுக்கு எதிராக, ஆட்சிக்கு எதிராக அவதூறுகளை வீசுவார்கள். அவர்களின் பொய்களுக்கு முன்னால், நம்முடைய உண்மை மக்களிடம் சென்று சேர வேண்டும். 

பாஜக கூட்டணி ஆட்சி வந்தால், தமிழ்நாட்டை என்ன செய்வார்கள் என்று சொல்ல வேண்டும். மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள். சாதிக்கலவரங்களை தூண்டுவார்கள். மக்களை அனைத்து வகையிலும் பிளவுபடுத்துவார்கள். நம்முடைய பிள்ளைகளை படிக்கவிட மாட்டார்கள். பிற்போக்குத்தனங்களில் நம்மை மூழ்கடிப்பார்கள். தொழில் வளர்ச்சி இருக்காது! இந்தி மொழித் திணிப்பு - பண்பாட்டுத் திணிப்பு செய்து, தமிழ்நாட்டின் தனித்துவத்தையே அழித்திவிடுவார்கள் என்று மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, புதிதாக சிலர் “நாங்கள்தான் மாற்று” என்று இளைஞர்களை ஏமாற்ற வருகிறார்கள். அவர்களுக்கும் பதிலடி தர வேண்டும்.” என்றார். 

எனக்கு ஆணவமோ, மமதையோ வராது..!  “இதுதான் தலைப்புச் செய்தியாக இருக்க வேண்டும்” - மு.க.ஸ்டாலின்.

மேலும், “தொண்டர்களின் நம்பிக்கைதான் நம்முடைய முதல் பலம். என் இயக்கம் - என் கட்சி - என் தலைமை என்ற எண்ணம் கொண்டவர்கள் நம்முடைய தொண்டர்கள். “நானும் - என் குடும்பமும் கழகத்துக்காக இருக்கிறோம். கழகம் எனக்கும், என் குடும்பத்துக்கும் பாதுகாப்பாக இருக்கிறது” என்ற எண்ணம்தான், இந்த இயக்கம் 75 ஆண்டுகளாக நிலைத்திருக்க அடிப்படை காரணம்.

அந்த வகையில், கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் ரூ.10 லட்சம்  நிவாரண நிதியாக வழங்கப்படும். அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும். 

“ஒருவரை நம்பி பொறுப்பை ஒப்படைத்துவிட்டால் அவர்கள் அதை சிறப்பாக செய்ய வேண்டும். “தலைவர் சொன்ன பணியை முடித்துவிட்டோம், வெற்றி பெற்றுவிட்டோம்” என்று சொல்ல வேண்டும். நான் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது, அந்த வெற்றிச் செய்தியை மட்டும்தான். நான் கொடுத்த பொறுப்பை, சரியா செய்து அந்த வெற்றிச் செய்தியை தாருங்கள் என்பதுதான் என்னுடைய இந்தப் பொதுக்குழுச் செய்தி.

திராவிட முன்னேற்ற கழகம் இருக்கும் வரை, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை, டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது. தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும். பொதுக்குழுவில் தொடங்கியிருக்கும் இந்தப் பயணத்த - சட்டமன்றத் தேர்தல் வெற்றிவிழாப் பொதுக்கூட்டத்தில் நாம் நிறைவு செய்ய வேண்டும். அதில் மீண்டும் ஒன்றாக சந்திப்போம்” என்று பேசினார்.