குடியரசு தினம் - கே.எஸ். அழகிரி வாழ்த்து

 
Ks Azhagiri

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் குடியரசு தின வாழ்த்துகளை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நமது நாட்டை இந்தியக் குடியரசாக அறிவித்தவர்கள் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியதன் மூலம் அனைத்து ஜாதி, மதம், மொழி, இனம் கொண்ட மக்கள் அனைவருக்கும் சமஉரிமையும், சம வாய்ப்பும் வழங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால், அதை முற்றிலும் சிதைக்கிற வகையில் மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயத்தோடு வாக்கு வங்கியை விரிவுபடுத்துகிற  வேலையை பா.ஜ.க. செய்து வருகிறது. பா.ஜ.க.வின் பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்துவதற்காக, தலைவர் ராகுல்காந்தி அவர்கள் இரண்டாவது முறையாக கடந்த ஜனவரி 14 ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கி இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை நடத்தி வருகிறார். இதன்மூலம் பா.ஜ.க. ஆட்சியில் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கேட்டு நெடிய பயணத்தை மும்பை மாநகரில் நிறைவு செய்ய இருக்கிறார். 

Republic Day

மக்களை பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்துகிற, அநீதிக்கு எதிராக குரல் எழுப்புகிற ஆற்றல்மிக்க தலைவராக ராகுல்காந்தி பவனி வந்து கொண்டிருக்கிறார். மக்களோடு மக்களாக, மக்களின் பிரச்சினைகளை அறிந்து அதற்காக பேசுகிற மக்கள் தலைவராக ராகுல்காந்தி மக்களால் நேசிக்கப்படுகிறார். 

ks alagiri

நமது அரசமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளை பாதுகாத்து மத, சமூக, நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்கிற வகையில், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரளுவதன் மூலமே இந்தியாவில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க முடியும். அத்தகைய சூழல் உருவாக குடியரசு நாளில் உறுதியேற்றுக் கொள்வோம். அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.