அலங்கார ஊர்தியை நிராகரிப்பது உங்கள் அதிகாரம்.. ஆனால் நீங்க சொன்ன காரணம்..?? - வைரமுத்து ட்வீட்..
குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்ததற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் நடைபெற் பிரமாண்ட அணிவகுப்பில் பங்கேற்க தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் வரலாற்றை பறைசாற்றும் அலங்கார ஊர்தி மாடல்களை நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் அனுப்பியிருந்தன. இதில் 12 மாநிலங்களை மட்டுமே மத்திய அரசு தேர்வு செய்திருக்கிறது.
தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களின் அலங்கார ஊர்திகளை திட்டமிட்டே மத்திய அரசு நிராகரித்ததாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

அதிலும் தமிழக அரசின் சார்பில் பங்கேற்க இருந்த அலங்கார ஊர்தியில் கப்பலோட்டிய தமிழன் வ. உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார் , பாரதியார் உருவங்கள் இடம்பெற்றிருந்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும், வ. உ.சி, வேலுநாச்சியார் , பாரதியார் போன்றவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனக் கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்திருக்கின்றனர். ஏற்கனவே மத்திய நிபுண்ர் குழுவின் இந்த செயல் வேதனையளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

இதற்கு கடும் கண்டத்தை பதிவு செய்துள்ள கவிஞர் வைரமுத்து, ”தமிழ்நாட்டு ஊர்தியை நிராகரிப்பது ஒன்றிய அரசின் அதிகாரம். ஆனால், காரணங்கள் சரியில்லை... வ.உ.சி வியாபாரியாம், வேலுநாச்சி ஜான்சிராணி சாயலாம், மருதிருவர் தீவிரவாதிகளாம். நிபுணர் குழுவின் புரிதல் இது... திருத்துவற்கு நேரமிருக்கிறது; எங்களுக்கும் பொறுமை இருக்கிறது.. “ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு ஊர்தியை நிராகரிப்பது ஒன்றிய அரசின் அதிகாரம். ஆனால், காரணங்கள் சரியில்லை.
— வைரமுத்து (@Vairamuthu) January 18, 2022
வ.உ.சி வியாபாரியாம், வேலுநாச்சி ஜான்சிராணி சாயலாம், மருதிருவர் தீவிரவாதிகளாம். நிபுணர் குழுவின் புரிதல் இது.
திருத்துவற்கு நேரமிருக்கிறது;
எங்களுக்கும்
பொறுமை இருக்கிறது


