விசிக உயர்நிலைக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

 
thiruma

சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில்  திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற விசிக உயர்நிலைக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதாவது, அண்மையில் மறைவெய்திய இடதுசாரி இயக்கத்தின் முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர்  தோழர் உஞ்சை அரசன் அவர்களுக்கும் இந்த உயர்நிலைக்குழு தனது அஞ்சலியைச் செலுத்துகிறது. சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் கண்டறியப்பட்ட பஞ்சமி நிலங்களை நிலமில்லாத பட்டியல் சமூக மக்களுக்குப் பிரித்துக் கொடுப்பதற்கு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனத் தமிழ்நாடு அரசை இந்த உயர்நிலைக்குழு கேட்டுக்கொள்கிறது.

2023 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது போல், பட்டியல் சமூகத்தினர் துணைத்திட்டம் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டம் ஆகியவற்றுக்கான சட்டத்தை உடனடியாக எதிர்வரும் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை இந்த உயர்நிலைக்குழு கேட்டுக்கொள்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக பட்டியல் சமூகத்தினருக்கான பதவி உயர்வில் தமிழ்நாடு அரசு இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த ‘200 பாய்ண்ட் ரோஸ்டர்’ முறை ரத்து செய்யப்பட்டு, டிஎன்பிஎஸ்சி தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசை முறை புதிதாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதனால், ஒட்டுமொத்தமாக பட்டியல் சமூகப் பிரிவினருக்கு உயர் பதவிகளில் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆகும் நிலை உருவாகியுள்ளது. எனவே, அரசமைப்புச் சட்டப் பிரிவு 16(4A)இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க எதிர்வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்பட வேண்டும். அதுவரையில் தரவரிசைப் பட்டியலில் பதவிகளைக் கீழிறக்கும் நடவடிக்கை  நிறுத்தப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை இந்த உயர்நிலைக்குழு கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

thiruma

பீகார் மாநில அரசைப் போல தமிழ்நாடு அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் போது 1931இல் கடைசியாக நடைபெற்ற சாதிவாரிக் கணக்கெடுப்பின்போது நிகழ்ந்த குறைபாடுகள் களையப்பட வேண்டும். அத்துடன், மக்கள் தொகை அடிப்படையில் பட்டியல் சமூகத்தினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்தவேண்டும் என இந்த உயர்நிலைக்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.  தமிழ்நாடு அரசுத் துறைகளில் பட்டியல் சமூகப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு முறையாக நிரப்பப்படவில்லை. உதாரணமாக AISHE (2019-2020) அறிக்கையின்படி தமிழ் நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஒட்டுமொத்தமாக 2020 ஆம் ஆண்டில் இருந்த ஆசிரியர் பணியிடங்கள் 2,02,085 ஆகும். அதில் 18% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்தால் 36,375 ஆதி திராவிடர்கள் பணியமர்த்தம் பெற்றிருக்கவேண்டும். ஆனால் 22,058 பேர்தான் ஆசிரியர்களாக உள்ளனர். மொத்தத்தில் 14,317 ஆசிரியர் பணியிடங்கள் ஆதிதிராவிடருக்கு மறுக்கப்பட்டுள்ளன. அதுபோலவே 4643 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் ஆதிதிராவிடருக்கு மறுக்கப்பட்டுள்ளன. அதற்குப் பிறகு கடந்த 2 ஆண்டுகளில் உருவான பின்னடைவுப் பணியிடங்களையும் சேர்த்து நிரப்புவதற்கும், குறிப்பாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எஸ்சி, எஸ்டி பணியிடங்களை நிரப்புவதற்கும் தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த உயர்நிலைக்குழு கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாடு முழுவதும் ஆதி திராவிட மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாகத் தென் மாவட்டங்களில் அது மோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. சனாதன சக்திகளால் மதத்தின் பெயரால் பரப்பப்படும் ‘சாதிப் பெருமித அரசியலே’ அதற்கு முதன்மையான காரணமாக உள்ளது. அவற்றைக் கட்டுப்படுத்தத் தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தற்போது, நெல்லை மாவட்டத்தில் அண்மையில் நடந்த சாதிய வன்கொடுமை வழக்கில் தடுப்புகாவல் சட்டம் பயன்படுத்தப்பட்டிருப்பது போல பட்டியல் சமூக மக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்பான பிற அனைத்து வழக்குகளிலும் எளிதில் பிணையில் வெளிவர இயலாத வகையில் தடுப்புகாவல் சட்டத்தை பயன்படுத்த வேண்டுமென இந்த உயர்நிலைக்குழு வலியுறுத்துகிறது.


தமிழ்நாட்டின் நகரப் பகுதிகளில் மட்டுமின்றி ஊரகப் பகுதிகளிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நுகர்வு மிக வேகமாகப் பரவி வருகிறது. அதனால், படுகொலைகள் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள்  அதிகரித்து வருகின்றன. அதைத் தடுக்கத் தமிழ்நாடு அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த உயர்நிலைக்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிராகப் போராடியவர்கள்மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் ரத்து செய்திருப்பதை இந்த உயர்நிலைக்குழு வரவேற்கிறது.  அதே வழக்கில் மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. அதனையும் ரத்துசெய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அத்துடன், கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் 2019 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை (‘The Tamil Nadu Land Acquisition Laws (Revival of Operation, Amendment and Validation) Act, 2019) ரத்து செய்யவேண்டுமென இந்த உயர்நிலைக்குழு அரசை வலியுறுத்துகிறது.

பாசிச இஸ்ரேலுக்கும் - பாலஸ்தீனத்தைச் சார்ந்த ‘ஹமாஸ்’ என்னும் படைக் குழுவினருக்கும் இடையில் மூண்டிருக்கும் போர் இப்போது மேலும் பல நாடுகளுக்கு விரிவடையக்கூடிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச விதிகளுக்குப் புறம்பான இஸ்ரேலின் மூர்க்கத்தனமான தாக்குதலில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளும் பெண்களும் முதியவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் செய்யவேண்டும் எனப் பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. சில நாடுகள் இஸ்ரேலுடன் தூதரக உறவைத் துண்டித்துக் கொண்டுள்ளன. இதுவரை கடைபிடித்துவந்த பாலஸ்தீன ஆதரவு நிலைபாட்டைக் கைவிட்டு இஸ்ரேலை ஆதரித்த இந்திய ஒன்றிய அரசு இப்போது தனது நிலையைத் திருத்திக்கொண்டு பாலஸ்தீனத்துக்கு நிவாரண உதவிகளைச் செய்துவருகிறது. பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கு ஹமாஸ் குழு இசைவு தெரிவித்தும்கூட தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் மறுத்துவருகிறது. இஸ்ரேலின் இந்தப் பாசிசப் போக்கை இந்த உயர்நிலைக்குழு கண்டிக்கிறது. அத்துடன்,  உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யுமாறு இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் என இந்திய ஒன்றிய அரசை இந்த உயர்நிலைக்குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.