“ஓய்வு எஸ்ஐ கொலை... கட்டப்பஞ்சாயத்து நடத்திய காவல்துறை”- கவன ஈர்ப்பு தீர்மானத்தில் ஈபிஎஸ் குற்றச்சாட்டு

 
ச் ச்

நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாகிர் உசேன் கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, காங்கிரஸ் மற்றும் விசிக கவன ஈர்ப்பு  தீர்மானம் கொண்டுவந்தன.

நெல்லை டவுண்  ஜாமியா தைக்கா தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி(வயது 60). இவர் தமிழ்நாடு காவல்துறையில்  பணியாற்றி கடந்த 2009-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார். தற்போது அவர் நெல்லை டவுண் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் முத்தவல்லியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜாகீர் உசேன் பிஜிலிக்கும், டவுண்  தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற தவுபிக்(34) என்பவருக்கும் இடையே தொட்டிப்பாலம் தெரு பகுதியில் பிரதான சாலையில் உள்ள ஒரு இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த பிரச்சினையில் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்ட நிலையில், நேற்று ஜாகீர் உசேன் பிஜிலி அதிகாலையில் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது காட்சி மண்டபம் அருகே வைத்து கிருஷ்ணமூர்த்தி, அவரது உறவினர்கள் 2 பேர் சேர்ந்து  கொலை செய்தனர். தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியின் சகோதரர் கார்த்திக், கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூருன்னிசாவின் சகோதரர் அக்பர்ஷா ஆகியோர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக நெல்லை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

இதுகுறித்து டவுண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் விசாரணை நடத்தி கிருஷ்ணமூர்த்தி, நூருன்னிசா, கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் மீது புதிய குற்றவியல் நடைமுறை சட்டம் 126(2), 296(பி), 103(1), 351(3), 49 ஆகிய 5 பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி நூருன்னிசா ஆகியோரை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்பேரில் துணை கமிஷனர் கீதா மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விமலன், அருணாச்சாலம் உள்ளிட்டோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாகிர் உசேன் கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, விசிக கவன ஈர்ப்பு  தீர்மானம் கொண்டுவந்தன. தீர்மானத்தின் மீது உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “நெல்லையில் ஜாகிர் உசேன் வழிமறித்து கொலை செய்யப்பட்டுள்ளார். 3 மாதங்களுக்கு முன் உயிருக்கு ஆபத்து என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முறையாக விசாரணை நடத்தப்படவில்லை. ஜாகிர் உசேன் புகார் அளித்த போதே விசாரணை செய்திருந்தால் கொலை நடந்திருக்காது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஜாகிர் உசேன் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாகிர் உசேனின் புகாரை எடுத்துக்கொள்ளாத காவல்துறை, அவரை அழைத்து கட்டப்பஞ்சாயத்து நடத்தியுள்ளனர்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.