உடனே பணிக்கு திரும்ப உத்தரவு! அரசு ஊழியர்கள் விடுப்பு ரத்து..!
பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறை அதிகாரிகளின் விடுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்துடன் கைகோர்த்து செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்திலும் எல்லையோர மாவட்டங்களில் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கிஷன்கார், ஜோத்பூர் விமான நிலையங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன.
பார்மர், ஜெய்சால்மர், ஜோத்பூர், பிகானர், ஸ்ரீ கங்கா நகர் ஆகிய மாவட்டங்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் விடுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. உடனடியாக தலைமை அலுவலகத்திற்கு வருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் ஆட்சியர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். ராணுவ மற்றும் மத்திய ஏஜென்சிகளின் நடவடிக்கைகளுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
போதிய அளவில் ரத்தம், பவர் பேக்கப் ஏற்பாடுகள், ஜெனரேட்டர்கள், அவசரகால ஏற்பாடுகள் உள்ளிட்டவை அனைத்தும் தயாராக இருக்க உத்தரவிட்டுள்ளனர். உணவு விநியோகம், அடிப்படை தேவைகளுக்கான விஷயங்கள் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடக் கூடாது. பெட்ரோல் நிலையங்களில் போதிய அளவில் எரிபொருள் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
எல்லையோர கிராமங்களில் உள்ள ஆபத்தான பகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. அங்கெல்லாம் பாதுகாப்பு படையினரை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களை அதிரடியாக வெளியேற்றி பாதுகாப்பாக வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் எல்லையோர பகுதிகளில் பதற்றம் நீடித்த வண்ணம் உள்ளது.


