நாளை நெற்பயிர்கள் கணக்கெடுப்பு
டிட்வா புயல் எதிரொலியாக திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணி நாளை தொடங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் மூன்று லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி நெற்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக சுமார் 20,000 மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்யாத நிலையில் வயல்வெளியில் தேங்கிய நீரை டீசல் இன்ஜின் மூலமாகவும், வாய்க்கால் வடிகால்கள் நீரோட்டத்திற்கு தடையாக இருந்த செடி, கொடி மற்றும் முட்புதர்கள் அகற்றி தண்ணீரை விவசாயிகள் வடிய வைத்தனர். சாகுபடி செய்யப்பட்ட வயல்வெளியில் தேங்கிய மழை நீரை போராடி விவசாயிகள் வடிய வைத்த நிலையில் நேற்று இரவு முதல் மீண்டும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மிகுந்த மனவேதனையில் இருந்து வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே கருப்பூர், பூந்தாழங்குடி, பெரிய கொத்தூர் , ராமநாதபுரம், மேலமணலி , ஈழங்கொண்டான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மீண்டும் சுமார் 5000 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது.
இந்நிலையில் டிட்வா புயல் எதிரொலியாக திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணி நாளை தொடங்கப்படும் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். சம்பா, தாளடி நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணியில் நாளை மாவட்ட வேளாண் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


