“அஜித், விஜய் போன்றவர்கள் மட்டுமே நன்றாக உள்ளனர்”- ஆர்.கே.செல்வமணி
சினிமா துறையில் நடிகர்கள் அஜித், விஜய் போன்ற 1% நபர்கள் மட்டுமே நன்றாக உள்ளனர், மற்ற 90% நபர்களின் வாழ்க்கை அன்றாடங்காய்ச்சி வாழ்க்கையாக உள்ளது எனதென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய திரைப்பட சினிமா மற்றும் தொலைக்காட்சி ஸ்டண்ட் இயக்குனர்கள் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்கள் சங்கம் சார்பில் இந்திய ஸ்டண்ட் கலைஞர்களின் வளர்ச்சிக்கும் தொழிலாளர்களின் மாநில காப்பீடு உரிமையை பெற்றுத்தர நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எம்.பி. திருச்சி சிவாவுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வானது சென்னை வடபழனியில் உள்ள ஸ்டண்ட் யூனியன் வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தலைவர் ஆர்.கே.செல்வமணி, “நாங்கள் யாருக்காக குரல் கொடுக்கின்றோமோ அவர்கள் தான் ஆட்சிக்கு வருவார்கள். இந்நிலையில், இந்திய சினிமாவில் எவரும் எங்களை பற்றி பேசாமல் இருக்கும் போது நீங்கள் எங்களை பற்றி பேசியுள்ளீர்கள் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றியதன் மூலம் எங்களின் வலி மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் தெரிய வைத்துள்ளீர்கள். 40 வருடங்களாக ஸ்டண்ட் தொழில் புரிந்து வருபவர்களுக்கு மத்திய, மாநில அரசின் மருத்துவ உதவிகள் உள்ளிட்ட எந்தவொரு நலத்திட்ட உதவிகளும் எங்களுக்கு வழங்கவில்லை. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு கூட நிவாரண தொகை வழங்கப்பட்ட நிலையில், ஸ்டண்ட் தொழில் மேற்கொண்ட போது உயிரிழந்த எங்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை.
சினிமா துறையில் நடிகர்கள் அஜித், விஜய் போன்ற 1% பேர் மட்டுமே நன்றாக உள்ளனர். மற்ற 90% பேர்களின் வாழ்க்கை அன்றாடங்காய்ச்சி வாழ்க்கையாக உள்ளது. எங்கள் மரணம் பக்கத்தில் இருந்தாலும், மக்களை சிரிக்க வைக்க 5 அடியில் இருந்து குதிக்க சொன்னாலும் குதிப்போம். சென்னையில் எங்களால் வாடகை கொடுத்து வாழ முடியாத சூழ்நிலையால், சென்னை புறநகர் பகுதியில் குறைந்த வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். மற்றவர்களுக்கு 8 மணி நேரம் வேலை பார்க்கும் நிலையில், நாங்கள் 18 மணி நேரம் வேலை புரிகிறோம். ஆனால், எங்களுக்கு அரசு தரப்பில் எந்த சலுகைகளும் வழங்கப்பட வில்லை. கலைஞர் எங்களுக்கு ஒரு மகத்தான திட்டத்தை கொடுத்தார், கலைஞர் ஆட்சி காலத்தில் எங்களுக்கு காப்பீடு திட்டம் கொடுத்தார். தமிழகத்தில் அடுத்ததாக வந்த ஆட்சி கலைஞர் என்று பெயர் கொண்டதால் அந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. கலைஞர் இருந்தவரை எங்களுக்கு பாதுகாப்பு இருந்துது. சினிமா துறையில் உள்ள 25 ஆயிரம் பேருக்கு மருத்துவ உதவிகள், வீடுகள் கட்டி தர வேண்டும் என முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தேன். நீங்களும் முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதியை சந்தித்தால் கோரிக்கை முன் வையுங்கள்” என்றார்.