’கோடிக்கணக்கில் பணம் பெற்றேன்’ ஆருத்ரா வழக்கில் ஆர்.கே.சுரேஷ் பகீர் வாக்குமூலம்

 
சுரேஷ்

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகியும் நடிகருமான ஆர்.கே.சுரேஷிடம் நடத்தப்பட்டு விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் 2438 கோடி ரூபாய் அளவிற்கு பொதுமக்களிடமிருந்து பணத்தை ஏமாற்றிய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டு அவரை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த வழக்கில் தப்பிக்க வைப்பதற்காக 15 கோடி ரூபாய் அளவில் பணத்தை கைது செய்யப்பட்ட தயாரிப்பாளரான மைக்கேல் ரோஸோ என்பவர் பாஜக நிர்வாகியும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் இடம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த பலமுறை சமன் அனுப்பியும் ஆர்.கே.சுரேஷ் ஆஜராகாமல் துபாயில் தங்கி இருந்தார். இதனை அடுத்து விசாரணைக்கு ஆஜராகாத ஆர்.கே.சுரேஷ் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. பல மாதங்களாக ஆஜராகாத ஆர்.கே.சுரேஷ் உயர்நீதிமன்றத்தில் லுக் அவுட் நோட்டீசை நிறுத்தி வைக்குமாறும் மனு தாக்கல் செய்திருந்தார்

இந்நிலையில் ஆர்.கே.சுரேஷ் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும் படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து லுக் அவுட் நோட்டீசை நிறுத்தி வைத்திருந்தது. அதன் அடிப்படையில் துபாயிலிருந்து சென்னை வந்த ஆர்.கே.சுரேஷ் நேற்று பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தின் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் ஆறு மணி நேரம் விசாரணை என்பது நடத்தப்பட்டது. தான் தலைமுறைவாக எங்கும் செல்லவில்லை எனவும் தனிப்பட்ட காரணங்களுக்காக துபாய் சென்றதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆர்.கே.சுரேச்ஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளரான மைக்கேல் ரூசோவிடம் இருந்து பணம் பெற்றதை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். ஒயிட் ரோஸ் என்ற திரைப்படத்தை தானும் மைக்கேல் ரூசோ ஆகியோர் இணைந்து தயாரிப்பதாகவும் அதற்காகத்தான் கோடிக்கணக்கில் பணத்தை வாங்கியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். அந்த பணத்தை சொந்த செலவிற்காகவும் ஆர்.கே.சுரேஷ் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இருப்பிடம் நடிகர் ஆர்.கே.சுரேஷ் அளித்த வாக்குமூலத்தின் உண்மைத்தன்மை அறிவதற்காக அது தொடர்பான ஆவணங்களுடன் இன்று விசாரணைக்கு ஆஜராகும் படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்திருந்தனர்.


அதன் அடிப்படையில் இன்றும் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆவணங்களுடன் நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஆஜராக உள்ளார். குறிப்பாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மைக்கேல் ரூசோ படம் விவகாரம் தொடர்பாகத்தான் பணம் கொடுத்து உள்ளாரா உள்ளிட்ட அடிப்படையில் விசாரணை என்பது மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் துபாயில் ஆர்.கே.சுரேஷ் இருந்த காரணத்தினாலும் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ராஜசேகரும் துபாயில் தலைமறைவாக இருந்த காரணத்தினாலும் இருவரும் சந்தித்து பேசினார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆர்.கே.சுரேஷ்க்கு கொடுக்கப்பட்ட பணத்தை தனது கட்சிக்காக செலவழித்தாரா? இந்த வழக்கு விவகாரத்தில் பாஜகவிற்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது.