காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தாய்மொழிக்கு அடுத்து சமஸ்கிருதம் படிக்கப்பட்டுள்ளது- ஆளுநர் ரவி
தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பாரதியாரின் பிறந்தநாள் விழா மற்றும் பாரதிய மொழிகள் தின விழாவில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களை மேடையேற்றி அவர்களுக்கான அங்கீகாரம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய ஆளுநர் ரவி, “இளைஞர்களாக இருந்தாலும், முதியவராக இருந்தாலும் நாம் அனைவரும் பாரதியின் படை வீரர்கள் தான். சுவாமி விவேகானந்தர், ஆதிசங்கரர், பாரதி ஆகியோர் குறைந்த வருடங்களே வாழ்ந்தாலும், காலம் உள்ள வரை பேசும் அளவுக்கு செயல்பட்டுவிட்டனர். பாரதிய மொழிகள் மீது பாரதி கொண்டிருந்த அன்பு அலாதியானது. பிரிட்டீஷ் அரசு இந்தியர்கள் மீது ஆங்கிலத்தை திணிக்க முயன்றபோது, தாய்மொழி மட்டுமே சரியான கல்வியை வழஙக முடியும் என அழுத்தமாக சொன்னார் பாரதி. ஆங்கிலேயர்கள் நமது மொழியை கொலை செய்ய நினைத்த போது, பாரதியார் தாய்மொழி குறித்து நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரிட்டீஷ் அரசாங்கம் நம் மொழிகளை அடிமைகளின் மொழி என குறிப்பிட்டது. இதனை கண்டித்து செய்தி ஊடகஙகளுக்கு கடிதம் எழுதிய பாரதி தமிழ் தான் சிறந்த மொழி என ஆதாரங்களுடன் நிரூபித்தார்.
தமிழ்நாடு மெட்ராஸாக இருந்தபோது, தொடக்கப் பள்ளியில் தாய் மொழியிலும், அதன்பிறகு தாய்மொழியுடன் சேர்த்து சமஸ்கிருதமும் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தாய்மொழிக்கு அடுத்து சமஸ்கிருதம் படிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணஙகளுக்காக மொழி ரீதியாக இந்திய மாகாணஙகள் பிரிக்கப்பட்ட்டன. ஆனால், அதுவே மொழி பிரிவினைவாதத்துக்கு வழிவகுத்துவிட்டது. 1700-களில் கிழக்கிந்திய கம்பெனி தலைவருக்கு, இங்கிலாந்தில் இருந்து இந்தியாவில் உள்ள இந்துக்களின் இலக்கிய, எழுத்துகளை, சிந்தனைகளை, வரலாற்றை சேகரித்து மொழிபெய்ப்பு செய்யுங்கள் என உத்தரவு வந்தது என்றால், நம்மிடம் உள்ள இதிகாசங்கள் மூலம் அறிவை வளர்க்கமுடியும் என அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.
இந்தியாவில் நடத்தப்பட்ட ஜி20 மாநாட்டில், இதுவரை அதில் இடம்பெறாத ஆப்பிரிக்க நாடுகளையும் சேர்த்து நடத்தியது இந்தியா. யாரையும் தனியாக விட்டுவிடக்கூடாது என்பது நம் கலாச்சாரத்துடன் ஒன்றியது. அதனால் தான் வாசுதேவ குடும்பகம் என ஜி20 மாநாட்டிற்கு பெயர் வைத்து நடத்தினோம். ஒரு நாடு அழிந்து, நம் நாடு வளர வேண்டும் என்பது நம் எண்ணம் அல்ல. அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒரு எதிர்காலத்தை நோக்கி பயணிக்கவேண்டும் என்பதனாலேயே யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தத்துவார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு நம் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது” எனக் கூறினார்.


