ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் அதிகாரிக்கு ரூ.1 கோடி பரிசு - ஈரோட்டில் போஸ்டர்!

 
erode

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுத்து, தண்டனை பெற்றுத்தரும் நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி பரிசு மற்றும் பாராட்டு விழா நடத்தப்படும் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார். இதேபோல் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னமும், அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னமும், தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது. இன்றுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Erode East

இந்நிலையில், ஈரோட்டில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரில்,  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுத்து, தண்டனை பெற்றுத்தரும் நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி பரிசு மற்றும் பாராட்டு விழா நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார் எழுந்து வரும் நிலையில், ஈரோட்டில் இவ்வாறு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.