ரூ. 21.26 கோடியை 30% வட்டியுடன் வழங்க வேண்டும்.." நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..
லைகா நிறுவனத்திற்கு ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் வழங்க வேண்டும் நடிகர் விஷாலுக்கு என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஷால் பிலிம் ஃபேக்டரி பட தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடமிருந்து நடிகர் விஷால் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாக பெற்றிருந்தார். இந்தக் கடனை லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. ஆனால் நடிகர் விஷால் இந்த தொகையை லைக்கா ப்ரொடக்ஷனுக்கு திருப்பி செலுத்தவில்லை. இதனயடுத்து லைக்கா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அதில் கடனை திருப்பிச் செலுத்தாமல் விஷாலின் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஐ. ஆஷா அமர்வு விசாரித்து வருகிறது. அப்போது இந்த வழக்கில் பலமுறை இருதரப்பும் நேரடியாக ஆஜராஜி விளக்கமளித்தனர். விஷாலிடம் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி 2 நாட்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். லைக்காவுக்கு எதிராக விஷால் தொடர்ந்த வழக்கில் 150-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு விஷால் பதில் அளித்திருந்தார். அந்த வழக்கின் வாத பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ரூ. 21.29 கோடியை 30 சதவீத வட்டியுடன் விஷால் லைக்கா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் அபராதமும் செலுத்த வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


