ரூ. 780 கோடி வாடகை பாக்கி - சென்னை ரேஸ் கிளப்புக்கு சீல்..
ரூ. 780 கோடி வாடகை பாக்கி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கிளப்புக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி ரேஸ் கிளப் 160 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1946ம் ஆண்டு இந்த கிண்டி ரேஸ் கிளப்புக்கு சென்னை மாகாண அரசு, 160 ஏக்கர் 86 சென்ட் நிலத்தை 99 ஆண்டுக்கு குத்தகைக்கு கொடுத்திருந்தது. அப்போது ஆண்டுக்கு 614 ரூபாய் 13 காசுகள் வாடகையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர் 1970 ஆம் ஆண்டு டிசம்பர் 18 முதல் வாடகையை உயர்த்துவது தொடர்பாக விளக்கம் அளிக்க மாம்பலம் - கிண்டி தாசில்தார் ரேஸ் கிளப்புக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். நோட்டீஸ்க்கு பதில் அளித்திருந்த ரேஸ் கிளப் 1946 ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் வாடகையை உயர்த்துவது குறித்த பிரிவு ஏதும் இல்லை என விளக்கம் அளித்தது. ஆனால் இந்த விளக்கத்தை நிராகரித்த அரசு, 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாய் வாடகை பாக்கிய செலுத்த வேண்டும் என சென்னை ரேஸ் கிளப்புக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கு விசாரணையின்போது, செலுத்த வேண்டிய வாடகை பாக்கி 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாயை ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிதிருந்தது. ஒரு மாதத்தில் வாடகை பாக்கி செலுத்தாவிட்டால் காவல்துறை உதவியுடன் ரேஸ் கிளப் நிர்வாகத்தை வெளியேற்றலாம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. தமிழ்நாடு அரசு சென்னை ரேஸ் பைக் வெளியேற்றி நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டிருந்தது. அதன்படி சென்னை கிண்டியில் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ்க்கு , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சீல் வைத்திருக்கிறது. அத்துடன் ரேஸ் கிளப் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் காலை முதல் வழக்கமான பணிகளுக்கு வரும் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.