மழை பாதிப்பு... வங்கிக் கணக்கில் ரூ.2 ஆயிரம் செலுத்துகிறதா தமிழக அரசு?

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2000 ரூபாய் நிவாரண நிதி வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னை மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை போல மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்து விடுமோ என மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். அந்த அளவுக்கு நிலைமை மோசமாகாமல் பார்த்துக்கொள்ள தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2000 ரூபாய் நிதி வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து பேசிய அதிகாரி ஒருவர், கடந்த 2015 ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது 5,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கள நிலவரங்களை அறிந்துள்ளார். சென்னையின் ஒவ்வொரு பகுதியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. பாதிப்பு விபரங்களை முழுமையாக சேகரித்த பின் நிவாரணத் தொகை குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்து 2015ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிவாரணத்தை போல இந்த ஆண்டும் சென்னை மக்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு நிவாரண தொகை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.