இளைஞர் அஜித்குமார் மரணத்தை மறைக்க ரூ.50 லட்சம் பேரம்? உயர்நீதிமன்றம சரமாரி கேள்வி!
மடப்புரம் கோயில் காவலாளியான இளைஞர் அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீசார் அவரை அடித்துக் கொன்று விட்டதாக உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் குற்றம்சாட்டுகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் என உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அஜித்குமாரை தாக்கிய சிறப்பு படையினர் 5 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், சிவகங்கை வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹென்றி, ''போலீசார் அஜித்குமாரை வெளியிடங்களில் வைத்து அடித்துள்ளனர். அஜித்குமார் பணியாற்றிய கோயிலில் இருந்த அனைத்து சிசிடிவி காட்சிகளையும் நீக்கியுள்ளனர். இப்போது வழக்கை நீர்த்துப் போக செய்வதற்காக சிவகங்கை எஸ்.பி பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புகார் கொடுத்த பெண்ணும், ஐஏஎஸ் அதிகாரி ஒருவரும் நெருங்கிய உறவினர். ஆகையால் தான் போலீசார் இந்த வழக்கில் இவ்வளவு வேகமாக செயல்பட்டுள்ளனர். ஆகவே இந்த கஸ்டடி மரணத்தை மறைக்க அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் திமுக பிரமுகர், சிவகங்கை மாவட்ட எஸ்.பி ரூ.50 லட்சம் பேரம் நடத்தியுள்ளனர்'' என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அரசு தரப்பில், ''இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து நடவடிக்கையும் உடனே எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காவலர்கள் கைது செய்யப்பட்டனர். எஸ்.பி. இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்'' என்று கூறப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தமிழக அரசுக்கு 3 முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளனர். நகை காணாமல்போன வழக்கு யாருடைய உத்தரவின்பேரில் தனிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது? சிவகங்கை எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்யாமல் பணிமாற்றம் செய்தது ஏன்? காவல்துறையினர் வெளியிடங்களில் வைத்து விசாரணை நடத்தியது ஏன்? என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த விவகாரத்தில் அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? திருட்டு வழக்கில் ஒருவர் விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். புலனாய்வு செய்வதற்கே காவல்துறை. அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் முழுமையாக வேலை செய்கின்றனவா? உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டுமென முழுமையான விவரங்களை மறைக்கக் கூடாது என்று நீதிபதிகள் கூறினார்கள்.


