பிரபல அரசியல் கட்சி நிர்வாகி வீட்டில் ரூபாய் 8.50 லட்சம் பறிமுதல்..!

 
1

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்னும் ஓரிரு நாட்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் அனைத்து கட்சிகளிலும் தேர்தல் பிரசாரப் பணிகள் சூடுபிடித்துள்ளன. மேலும், அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழு மற்றும் போலீசாரின் ரோந்து பணி மற்றும் அதிரடி சோதனைகளும் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டு உள்ளன. இச்சோதனைகள் மூலம் ஆவணமின்றி கோடிக்கணக்கான பணம், தங்க நகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவருக்கு, புதிய நீதிக்கட்சியின் வணிகர் அணி தலைவர் வினோத் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், மதுரவாயலில் உள்ள புதிய நீதிக்கட்சி நிர்வாகி வினோத் வீட்டில், வாக்காளர்களுக்கு வழங்க அதிகளவிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து, மதுரவாயலில் உள்ள புதிய நீதிக்கட்சி நிர்வாகி வினோத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். எனினும், அங்கு வினோத் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தக்கூடாது என்று கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் புதிய நீதிக்கட்சி மற்றும் பாஜ நிர்வாகிகள் திரண்டனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மதுரவாயல் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அங்கிருந்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போக செய்தனர். பின்னர் புதிய நீதிக்கட்சி நிர்வாகி வினோத் வீட்டில் சுமார் 5 மணி நேரத்துக்குமேல் நடைபெற்ற அதிரடி சோதனையில், அங்கிருந்து 60 வேட்டி, 60 சேலை, மணிபர்ஸ் உள்பட பல்வேறு பரிசு பொருட்கள் மற்றும் ஆவணமின்றி வைத்திருந்த ₹8.50 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றுக்கு உரிய ஆவணங்கள் காட்டி திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.