'பவள விழாவுக்கு வீட்டில் விளக்கேற்ற உத்தரவு' என பொய் செய்தியை வெளியிட்டிருக்கீங்க- ஆர்.எஸ்.பாரதி
எளிய தமிழில் இருக்கும் அறிக்கையை படிக்கத் தெரியாதது போல 'பவள விழாவுக்கு வீட்டில் விளக்கேற்ற உத்தரவு' என்று செய்தி வெளியிட்டுள்ளீர்கள். இப்படி அந்த அறிக்கையில் இருக்கிறதா? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து வகையான ஆதிக்கத்தையும் ஒடுக்கி அன்னைத் தமிழ்நாட்டை மேம்படுத்தத் தோன்றிய இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் உதயமாகி 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. பவள விழா கொண்டாடும் அமைப்பை ஆறாவது முறையாக அரியணை ஏற்றி அழகு பார்த்துள்ளார் 'திராவிட மாடல்' ஆட்சியை நடத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
தமிழ்நாட்டை வளப்படுத்திய இயக்கம் இது. அதனால் வீதிகள் தோறும் கழகக் கொடி பறக்கட்டும் என்று தலைவர் சொல்லி இருக்கிறார். வீதிகள் தோறும் மட்டுமல்ல, வீடுகள் தோறும் பறந்திடவும் கேட்டுக் கொண்டுள்ளார். 'கழகக் கொடி மறக்காத கழகத்தினரின் வீடுகளே இல்லை என்னும் வகையில் பவளவிழாவை முன்னிட்டு நம் அனைவரது இல்லங்கள், அலுவலகங்கள், வணிக வளாகங்களில் கொடியேற்றிக் கொண்டாடுவோம்' என்று தமிழில், புரிகிற எளிமையான சொற்களில் தான் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எளிய தமிழில் இருக்கும் அறிக்கையை படிக்கத் தெரியாதது போல 'பவள விழாவுக்கு வீட்டில் விளக்கேற்ற உத்தரவு' என்று செய்தி வெளியிட்டுள்ளீர்கள். இப்படி அந்த அறிக்கையில் இருக்கிறதா? 'ஈவெரா, அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் படங்களை அலங்கரித்து வைத்து, விளக்கேற்றி கொண்டாட வேண்டும்' என்று தலைவர் சொன்னதாய் எழுதி இருப்பதை நிரூபிக்க முடியுமா உங்களால்? வீடுகளை விளக்குகளால் அலங்கரிப்பதற்கு கூட விளக்கமா?
பிரதமர் மோடி வழியில் விளக்கேற்றச் சொல்கிறார் என்ற விளக்கமும் கொடுத்துள்ளீர்கள். கொரோனாவில் இலட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தபோது அதை தடுக்க முடியாமல் 'விளக்கேற்றவும்', 'சிங்கி அடிக்கவும்' சொன்னார் பிரதமர் மோடி. இப்படி அரைவெட்டுத்தனமாக தெரிந்து எழுதுகிறீர்களா?அல்லது வளர்ச்சியே இவ்வளவுதானா? என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.