இபிஎஸ்ஸுக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்..!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீ்திமன்றம் உத்தரவிட்டது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். முதலில் அவர் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக தன்னை பரிசிலீத்துக் கொள்ள வேண்டும்.
கடந்த, 2018-ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நெடுஞ்சாலை துறையில் 4,800 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்தது தொடர்பாக திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. திமுகவின் சார்பில், நான்தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். இருப்பினும், நாங்கள் சிபிஐ விசாரணை கோரவில்லை. ஆனால் நீதிமன்றம், இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. சென்னை நீதிமன்றத்தின் சிபிஐ விசாரணை உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தடை பெற்றார். இதில் சிபிஐ விசாரணை வேண்டாம் என எடப்பாடி கேட்டதற்கு, உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் ஆட்சேபனை இல்லை எனக் கூறினோம். ஆனால் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்லக் கூடாது என, எடப்பாடி பழனிசாமி மனசாட்சியை அடகு வைத்து விட்டு அறிக்கை விட்டிருக்கிறார்.
கடந்த 2016-ம் ஆண்டு தமிழகத்தில் திருப்பூர் அருகே தேர்தல் நேரத்தில், 570 கோடி ரூபாய் கன்டெய்னர் லாரில் பிடிப்பட்டது. அப்போது அதிமுக ஆட்சி நடைபெற்றது. கட்டுக்கட்டாக நோட்டுகளை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர். கோவை மாவட்டத்தில் இருந்து கன்டெய்னர் லாரியில் கொண்டு வரப்பட்ட நிலையில், திருப்பூரில் நடு சாலையில் பணம் பிடிபடுகிறது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடுத்தோம். கடந்த, 2017–18-ல் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை என உத்தரவிடப்பட்டது. இதுவரை சிபிஐ தனது விசாரணையை துவக்கவில்லை. சிபிஐ விசாரணை எப்படி இருக்கும் என்பதற்கு இதுவே உதாரணம். ஆகவே சிபிஐ விசாரைணையை எப்போதும் நாங்கள் கோருவதில்லை.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய இறப்பு சம்பவத்தில், தமிழக முதல்வர் துரித நடவடிக்கை எடுத்தார். 57 மருத்துவர்களை உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்ததுடன், மாவட்ட ஆட்சியர் மாற்றம்., எஸ்பி சஸ்பென்ட். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது என நடவடிக்கைகள் பாய்ந்தன. ஆனால் எடப்பாடி பழனிசாமி, தான் யோக்கியரை போல, இந்த வழக்கில் மேல் முறையீடு செல்லக் கூடாது என்கிறார். சட்டம் ஓழுங்கு கெட்டு போச்சு என பேசுகிறார்.
அதிமுக ஆட்சியில் நடக்காத சம்பவங்களா? மத்திய அமைச்சராக இருந்த தலித் எழில்மலையின் மருமகன் சென்னையில் கொலை செய்யப்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அந்த வழக்கில் தீர்ப்பு கூட வந்தது. ஆக தனிப்பட்ட கொலைகளுக்கும் சட்டம் ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை. இதனை எடப்பாடி பழனிசாமி புரிந்துக் கொள்ள வேண்டும். ஓசூர் நீதிமன்றம் சம்பவம், தஞ்சையில் ஆசிரியை கொலை இரண்டும் தனிப்பட்ட விவகாரங்களின் அடிப்படையில் நடந்தவை. துாத்துக்குடி சம்பவத்தில் நடந்த உயிரிழப்புதான் சட்டம் ஒழுங்கு பிரச்சினை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடைசி நாட்களில் வாழ்ந்தது கோடநாட்டில் தான். இது அதிகாரிகளுக்கும் தெரியும். கோடநாட்டில் இருந்து கோட்டையை இயக்கிக் கொண்டிருந்தார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது, கோடநாட்டில் நடந்த சம்பவங்களில் யாரையும் காப்பாற்ற முடியவில்லை. அங்கு பணியில் இருந்த காவலாளி உட்பட 5 கொலைகள் நடந்துள்ளது. அங்கிருந்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், கடந்த, 2018 நவம்பர் 2-ம் தேதியன்று கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஆசிரியை குத்திக் கொலை; கடந்த, 2018 ஆகஸ்ட் 14-ல் பெரம்பலுார் அருகே பட்டபகலில் ஆசிரியை வழிமறித்து கத்தியால் குத்திக் கொலை.; கடந்த 2020 டிசம்பர் 23-ல் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆசிரியை படுகொலை, கணவன் கைது; கடந்த 2017 ஜனவரி 8-ல் கோவையில் கல்லுாரி ஆசிரியை கழுத்து அறுத்து தீ வைத்து கொலை; கடந்த 2017 மே 9-ல் கள்ளக்காதல் விவகாரத்தில் காதலியை காரை ஏற்றி கொலை; கடந்த 2019 ஜூலை 8-ல் துாத்துக்குடியில் அரசு பள்ளி ஆசிரியர் படுகொலை நடந்துள்ளது. இவையெல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என எடுத்துக் கொள்ள முடியுமா?
ஆகவே எடப்பாடி பழனிசாமி புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய ஆட்சியில், தமிழகத்தில் குற்றங்கள் குறைந்து உள்ளது. அதிமுக ஆட்சியில் 2020-ம் ஆண்டில் 1,672 கொலைகள் நடந்துள்ளது. தற்பொழுது பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நடப்பாண்டில் கடந்த ஜூன் மாதம் 30 வரை, 792 கொலைகள் நடந்துள்ளது. இனியும் கடும் நடவடிக்கைகள் தொடரும். சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பு ஏற்றதற்கு பின்பு, டிஎஸ்பி ரேங்கில் மண்டலம் வாரியாக ரவுடிகளை கட்டுப்படுத்த அதிகாரிகளை நியமித்து நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் சென்னையில் ரவுடியிசம் குறைந்துள்ளது.
ஒட்டு மொத்த அதிமுக ஆட்சியில் 1 லட்சம் கொலைகள் நடந்ததாக நான் சொல்வேன். நான்தான் புள்ளி விபரத்துடன் கூறியிருக்கிறேனே? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கள்ளக்குறிச்சி விவகாரம், ஆம்ஸ்ட்ராங் கொலை போன்ற விசயங்களை அதிமுக பெரிதுபடுத்தியது. பிரச்சாரம் செய்தனர். இருந்தும் திமுக வெற்றி பெற்றது. மக்கள் உண்மையை புரிந்து கொண்டு இருக்கிறார்கள். மக்கள் மத்தியில் தவறான கருத்தை பரப்ப எடப்பாடி பழனிசாமி முட்டிப் போட்டு குட்டிக்கரணம் போடுகிறார். அது எடுபடாது.
அக்னி நியூஸ் சர்வீஸ் என்கிற நிறுவனம் கருத்து கணிப்பு எடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் காங் கூட்டணி வெற்றி பெறும் என அந்த நியூஸ் ஏஜென்சி கூறியுள்ளது. அந்த நிறுவனம்தான் தமிழ்நாட்டில் 54 சதவீதம் மக்கள் இந்த ஆட்சி திருப்தி என சொல்லி இருக்கிறார்கள். சில விசயங்களில் திருப்தி என 17 சதவீதம் சொல்லி உள்ளனர். 29 சதவீதம் பேர் மட்டுமே ஆட்சியில் திருப்தி இல்லை என சொல்லி இருக்கிறார்கள். ஆக 71 சதவீதம் ஆதரவு ஆட்சிக்கு உள்ளது.
தஞ்சை மற்றும் ஓசூரில் நடந்த சம்பங்களை நியாயப்படுத்தவில்லை. உண்மையில் வருந்துகிறோம். அரசு நடவடிக்கை எடுத்தது. சில சம்பவங்கள் தவிர்க்க முடியாத நிலையில் உள்ளது. அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சுவாதி கொலை வழக்கு என்னாச்சு?. ஆகவே சில தனிப்பட்ட நிகழ்வுகளை மையப்படுத்தி மட்டும் கேள்வி கேட்கக்கூடாது. பொள்ளாச்சி சம்பவத்தைகூட இந்த நேரத்தில் நினைவு கூற முடியும். இந்த ஆட்சியில் நிறைய நல்ல மாற்றம் நடந்துள்ளது ஆர்.எஸ்.பாரதி கூறினார்.