ரூ. 5 கோடி மதிப்பிலான போர்வைகளை திருப்பி அனுப்பிய கோ- ஆப்டெக்ஸ் நிறுவனம்..

 
ரூ. 5 கோடி மதிப்பிலான போர்வைகளை திருப்பி அனுப்பிய கோ- ஆப்டெக்ஸ் நிறுவனம்..

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் கூட்டுறவு கைத்தறி சங்கங்களில் இருந்து வாங்கிய சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான போர்வைகளை தரம் குறைவாக இருப்பதாக கூறி கோ-ஆப்டெக்ஸ்  நிறுவனம் திருப்பி அனுப்பி இருக்கிறது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை போர்வை (பெட்ஷீட்) உற்பத்தியில் புகழ்பெற்ற விளங்கி வருகிறது. இங்கிருந்து தான்  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் போர்வைகள்  உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.   சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 40க்கும் மேற்பட்ட கைத்தறிவு மற்றும் கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் இயங்கி வருகின்றன.   இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.  கூட்டுறவு சங்கங்கள் மூலமாக  வழங்கப்படும் நூல்களைக் கொண்டு கைத்தறி நெசவாளர்கள் போர்வைகளை உற்பத்தி செய்து அந்தந்த கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குவர்.  அதற்கான கூலியை அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் இருந்து நெசவாளர்கள் பெற்றுக் கொள்பவர்.

கைத்தறி நெசவாளர்கள்

இந்த நிலையில் தான் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நெசவாளர்கள் நெசவு செய்து கொடுத்த போர்வைகள் தரம் குறைவாக இருப்பதாக கூறி கோ - ஆப்டெக்ஸ் நிறுவனமானது கொள்முதல் செய்த போர்வைகளை திருப்பி அனுப்பி இருக்கிறது.  சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான பெட்ஷீடுகளை திருப்பி இருப்பது கூட்டுறவு சங்கத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   குறிப்பாக இந்த நெசவாளர்களை பொறுத்தவரையில் கூட்டுறவு நூற்பாலை கழகத்திடமிருந்து பெறக்கூடிய நூல்களை கொண்டே போர்வைகளை நெசவு செய்து வருகின்றனர்.  அவர்கள் தரக்கூடிய நூல்களை கொண்டு மட்டுமே நெசவாளர்கள் போர்வைகளை உற்பத்தி செய்து தரக்கூடிய சூழலில்,  தரம் குறைவாக இருப்பதாக கூறுவது அதிர்ச்சி அளிப்பதாக நெசவாளர்கள் கூறுகின்றனர்.  100% பருத்தியாலான நூல்களை கொண்டு இந்த கைத்தறி போர்வை ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

ரூ. 5 கோடி மதிப்பிலான போர்வைகளை திருப்பி அனுப்பிய கோ- ஆப்டெக்ஸ் நிறுவனம்..

ஆனால் இந்த போர்வைகள் திருப்பூர்  பனியன் உற்பத்தி கழிவுகளில் இருந்தும்,  பாலிஸ்டர் நூல்களாலும் தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறி கோ- ஆப்டெக்ஸ் நிறுவனம் திருப்பி அனுப்பியிருக்கிறது. அதுமட்டுமின்றி விசைத்தறி போர்வைகளை,  கைத்தறி போர்வைகள் என கூறி சில கூட்டுறவு சங்கங்கள் கோ-ஆப்டெக்ஸ்  நிறுவனத்திடம் விற்பனை செய்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது.  இதன் காரணமாகவே 5 கோடி ரூபாய் மதிப்பிலான போர்வைகளை திருப்பி அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.   அது மட்டும் இன்றி கடந்த 6  மாத காலமாகவே நெசவாளர்களிடமிருந்து கொள்முதலை நிறுத்தியிருக்கிறது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம்.   இதன் காரணமாக 40 கோடி ரூபாய் மதிப்பிலான போர்வைகள் உற்பத்தி செய்யப்பட்டு முடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக நெசவாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  இந்த விவகாரத்தில் அரசும் கைத்தறி துறை நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.