"குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம்தோறும் ரூ.1000 தர வேண்டும்" - சசிகலா வலியுறுத்தல்

 
sasikala

தமிழ்நாட்டில் உள்ள குடும்ப தலைவிகள் அனைவருக்கும் ரூ.1000 ரூபாய் தர வேண்டும் என்று  சசிகலா வலியுறுத்தியுள்ளார்.

இதுக்குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுகவினர் பெண்களுக்கு 1000 ரூபாய் அளிப்பதை வரவேற்கும் அதே நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள குடும்ப தலைவிகள் அனைவருக்கும் கிடைக்க பெற்றால் அதை மனப்பூர்வமாக அனைவரும் வரவேற்போம். திமுகவினர் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதி என்னவென்றால்? "தமிழ்நாட்டில் உள்ள குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவோம்" என்பதை சொல்லித்தான் ஆட்சியில் அமர்ந்தீர்கள். ஆனால், இன்றைக்கு என்ன சொல்கிறீர்கள்? தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் தான் 1000 ரூபாய் கிடைக்கும் என்று அந்தர்பல்டி அடித்துவிட்டீர்கள். இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடி பெண்கள் பயனடைவார்கள் என்றும், இதற்காக 7,000 கோடி ரூபாய் இந்த ஆண்டிற்கு ஒதுக்கியிருப்பதாக கடந்த நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. உங்கள் கணக்குப்படி ஒரு கோடி பெண்களுக்கு தருவதாக இருந்தால், 12,000 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கவேண்டும். ஆனால் நீங்கள் ஒதுக்கியிருக்கும் தொகையை கணக்கிடும்போதே உங்கள் திட்டம் என்னவென்று நன்றாக தெரிகிறது, சுமார் 50 லட்சம் பெண்களுக்கு கூட 1000 ரூபாய் மாதம்தோறும் கிடைக்குமா? என்பது தெரியவில்லை. 

money

தற்போது யாருக்கெல்லாம் 1000 ரூபாய் கிடைக்கும் என்று பெண்களின் தகுதியை நிர்ணயம் செய்ய திமுக அரசு விதிமுறைகள் என்ற பெயரில் ஒரு நீண்ட பட்டியலை கொடுத்துள்ளது. இத்தனை விதிமுறைகளை பின்பற்றினால் தமிழ்நாட்டில் சுமார் 40 லட்சம் குடும்பத்தலைவிகளை கூட தேர்வு செய்ய முடியாது. மேலும், இந்த சொற்ப அளவிலான பயனாளர்களுடைய பட்டியலில் இடம் பெற போகிறவர்கள் யார்? என்று ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் திமுகவினரின் முழு ஆதரவு பெற்றவர்களாகத்தான் இருக்கக்கூடும். எனவே, தகுதி வாய்ந்த பெண்கள் என்ற பட்டியலில் இடம் பிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இதற்காகவே, நம் தமிழக பெண்கள் போராட வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  முதியோர் உதவித்தொகை, விதவைத் தொகை போன்று உதவிகளை பெறுபவர்களுக்கு 1000 ரூபாய் கிடையாது என்று அறிவித்து இருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்கனவே முதியோர் உதவி தொகை பெற்றுக்கொண்டு இருந்தவர்கள் யாருக்கும் கிடைப்பதில்லை. தற்போது,  தகுதியில்லாதவர்களாக ஆகிறார்களா? என்பது புரியவில்லை. 

sasikala

தகுதி வாய்ந்த பெண்கள் என்ற பட்டியலில் இடம் பிடிப்பதற்காக, தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள், தங்கள் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கும் குறைவானதுதான் என்பதை நிரூபிக்க, இனி எண்ணற்ற போராட்டங்களை சந்திக்க போகிறார்கள். இந்த திமுக தலைமையிலான அரசிடமிருந்து, ஏழை எளிய மக்கள் தங்கள் குடும்பத்திற்கான ஆண்டு வருமான சான்றிதழை பெறுவதற்குள், திமுகவினர் தங்கள் ஆட்சிக்காலத்தையே முடித்துவிடலாம் என்ற உள்நோக்கம் இருப்பதாகத்தான் தோன்றுகிறது.  தமிழகத்தில் குடும்ப அட்டை இல்லாமலும், ஆதார் அட்டை இல்லாமலும் எண்ணற்ற குடும்பங்கள் சாலை ஓரத்திலும், நாடோடிகளாகவும், ஊருக்கு வெளியிலும் தங்கள் வாழக்கையை இன்றைக்கும் நடத்தி கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் தங்கள் தகுதியை எவ்வாறு நிரூபிக்க முடியும் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.  முதியோர் உதவித்தொகை, கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை, தாலிக்கு தங்கம், மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்குவது, அம்மா உணவகம் போன்ற அத்துனை மக்கள் நலத் திட்டங்களையும் நிறுத்திவிட்டு, தற்போது 1000 ரூபாய் உரிமை தொகை என்ற மிட்டாயை காட்டி மக்களை ஏமாற்றுவது மிகப் பெரிய பாவம். நடைமுறையில் இருந்த மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முடியாத, நிர்வாக திறமையற்ற திமுக தலைமையிலான அரசால் புதிதாக தமிழக மக்களுக்கு என்ன நல்லது செய்து விடப்போகிறார்கள்? என்பது அனைவரும் எழுப்புகின்ற கேள்வியாக இருக்கிறது. 

tn

திமுகவினரை போன்று சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று இல்லாமல், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிறந்த குழந்தை முதல், முதியவர்கள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் மக்கள் நலத் திட்டங்களை வழங்கினார்கள். அம்மா அவர்களின் நல்லாட்சியை பார்த்துகூட திட்டங்களை சரியாக செயல்படுத்த திமுகவினருக்கு தெரியவில்லை. இவற்றையெல்லாம் தமிழக மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். திமுகவினரை ஆட்சியில் அமரவைத்து தாங்கள் செய்த தவறை தமிழக மக்கள் இனி எந்த காலத்திலும் செய்யமாட்டார்கள் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, திமுகவினர் தொடர்ந்து மக்களை ஏமாற்றும் முயற்சிகளை கைவிட்டு விட்டு, தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல், குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம்தோறும் 1000 ரூபாய் தர வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக் கொள்கிறேன். " என்று குறிப்பிட்டுள்ளார்.