பிரதமர் மோடி 75வது வயதில் ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்துக்கு ஆர் எஸ் எஸ் தலைவர் ரியாக்ஷன்..!

 
1 1

75 வயதில் ஓய்வு பெறுவது குறித்த ஊகங்களுக்கு பதிலளித்த ஆர்எஸ்எஸ் தலைவர் பாகவத், நானோ அல்லது வேறு யாரோ 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று நான் கூறவில்லை என்று தெரிவித்தார். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆகியவை தனித்தனியாக செயல்படுகின்றன என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். சங்கத்துக்கு சாகாக்களை எப்படி நடத்துவது என்று தெரியும். பாஜகவுக்கு அரசாங்கத்தை எப்படி நடத்துவது என்று தெரியும். அவர்கள் ஒருவருக்கொருவர் ஆலோசனைகளை மட்டுமே வழங்குகிறார்கள் . பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பது உட்பட அனைத்தையும் சங்கம் தான் முடிவு செய்கிறது என்பது முற்றிலும் தவறு என்றும் அவர் கூறினார்.

மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ஆர்எஸ்எஸ் முழுமையாக ஆதரிக்கிறது. அது தேவைப்படும் வரை ஆதரிக்கும். சாதி என்பது காலாவதியான அமைப்பு. அது போக வேண்டும் என்றும் அவர் கூறினார். மக்கள் தொகை மாற்றங்கள் குறித்து பேசிய அவர், மதமாற்றம் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் ஆகியவை கவலை அளிப்பதாக உள்ளது. மதம் என்பது தனிப்பட்ட விருப்பம். யாரும் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படக்கூடாது. அதை நாம் தடுக்க வேண்டும். இரண்டாவது விஷயம் ஊடுருவல். நம் நாட்டு குடிமக்களுக்கு வேலை கொடுப்பது முக்கியம் என்று அவர் கூறினார். வேலை வாய்ப்புகள் முஸ்லிம்கள் உள்பட நம் மக்களுக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவின் தாக்கங்களை ஆர்எஸ்எஸ் ஆராய்ந்து வருகிறது. அதற்கு மொழிகளைக் கற்றுக்கொள்ள முடியும். ஆனால் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடியுமா என்று கேள்வி எழுப்பினார். அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக உறவுகள் குறித்து பேசிய அவர், சர்வதேச வர்த்தகம் அவசியம். ஆனால் அழுத்தத்தின் கீழ் நட்பு இருக்க முடியாது. டிரம்ப்பை எப்படி கையாள்வது என்று நாங்கள் அரசுக்கு சொல்ல மாட்டோம். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். நாங்கள் அதை ஆதரிப்போம் என்று தெரிவித்தார்.