ஆளுங்கட்சி தலையீடு - ஆம்ஸ்ட்ராங் மனைவி பரபரப்பு மனு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி, அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றம் முறையிட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், வழக்கறிஞர் அருள், சிவசக்தி, ஹரிஹரன், மலர்க்கொடி, அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், ரவுடி நாகேந்திரன் , ரவுடி புதூர் அப்பு , சீசிங் ராஜா உள்ளிட்ட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் மறைவை தொடர்ந்து அவரது மனைவி பொற்கொடி அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டார். பின்னர் ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி பொற்கொடி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். ஆளுங்கட்சி தலைவர்கள் விசாரணையில் தலையிட்டுள்ளதால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என மனுவில் முறையிட்டுள்ளார். முறையீடு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.


