எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான ரூ.100 கோடி நில மோசடி வழக்கு- ஏழாவது நபர் கைது

 
daf

அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தொடர்புடைய 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் 7-வது நபராக யுவராஜ் என்பவரை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்தனர்.

vijayabaskar
       
கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தங்களுக்கு வேண்டியவர்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்ததாக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார்  கடந்த ஜூன் மாதம் வழக்கு பதிந்தனர். இதையடுத்து எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவானார். 35 நாள்களுக்குப் பிறகு ஜூலை 16 ம் தேதி எம்.ஆர். விஜயபாஸ்கர் கேரளாவில்   கைது செய்யப்பட்டார்.
   
15 நாள் திருச்சி மத்திய சிறையில் நீதிமன்றக் காவலுக்குப் பிறகு அவர்  நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தினமும் கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் அவர் கையெழுத்திட்டு வருகிறார். இதே வழக்கில், காவல் ஆய்வாளர் பிரதிவ்ராஜ், பிரவீன்,  சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் சார்லி என 4 பேர் கைது செய்யப்பட்டருந்தனர். இதே வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் முன் ஜாமீன் பெற்றிருந்தார்.

Image
  
கடந்த சில தினங்களுக்கு  முன்னர் சேகரின் முன் ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கடந்த 2 ம் தேதி  சிபிசிஐடி போலீசார் கரூரில் சேகரை கைது செய்தனர். அவருடன் சேர்த்து செல்வராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். 22 ஏக்கர் நிலம் 4 பேர்களின் பெயரில் பத்திரப் பதிவு செய்யப்பட்டது.  இதில், ஒருவர் செல்வராஜ். கைது செய்யப்பட்ட இருவரும்  கரூர் முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கரூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
   
இந்நிலையில், சிபிசிஐடி போலீசார் இந்த 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் 7 வது நபராக யுவராஜ் என்பவரை  கைது செய்தனர். போலி ஆவணங்கள் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திர பதிவு செய்து அந்த பத்திரங்களை கேட்டு தன்னை மிரட்டியதாக கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதர்  கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.    இதில் முதலாவது குற்றவாளியாக யுவராஜ் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு அதனடிப்படையில் முன்னாள் அமைச்சர். எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட யுவராஜ் கரூர் முதலாவது குற்றவியல் நடுவர் பரத்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.  அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.