சோகம்..!! சவாரிக்காக காத்திருந்த ஆட்டோ டிரைவரை கடித்துக் குதறிய ராட்வீலர் நாய்கள்..!

 
1 1

கால்நடை வல்லுனர்கள் குழு பரிந்துரைப்படி, டோசா இனு (Tosa Inu), பிட்புல் டெரியர் (Pitbull Terrier), ஃபிலா பிரசிலிரோ (Fila Brasileiro), டோகோ அர்ஜெண்டினோ (Dogo Argentino), போயஸ்போல் (Boesboel), அமெரிக்கன் புல்டாக் (American Bulldog), அமெரிக்கன் ஸ்டாஃப்ஃபோர்ட்ஷயர் டெரியர் (American Staffordshire Terrier), காங்கல் (Kangal), டோர்னஜாக் (Tornjak), தென் ரஷ்ய ஷெப்பர்ட் நாய் (South Russian Shepherd Dog), காக்கேசிய ஷெப்பர்ட் நாய் (Caucasian Shepherd Dog), மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய் (Central Asian Shepherd Dog), சார்ப்ளானினாக் (Sarplaninac), மாஸ்கோ காவல் நாய் (Moscow Guard Dog), கனாரியோ (Canario), பேன்நாய் (Bandog), ஜப்பானிய டோசா மற்றும் அகிதா (Japanese Tosa and Akita), கேன் கோர்சோ (Cane Corso), மாஸ்டிஃப் (Mastiffs), ரோடேஷியன் ரிட்ஜ்பேக் (Rhodesian Ridgeback), அக்பாஷ் (Akbash), ஓநாய் நாய்கள் (Wolf Dogs), ராட்வீலர் டெரியர்கள் (Rottweiler Terriers) ஆகிய 23 வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்கள் மிகவும் ஆக்ரோஷமானவை மற்றும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் என அடையாளம் காணப்பட்டது.

இதையடுத்து இந்த பட்டியலில் உள்ள நாய் வகைகளை இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்படுவதாக அறிவித்தது. மேலும் இந்த வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றுக்கு உடனடியாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். வெளியே அழைத்து செல்லும் போது, இணைப்பு சங்கிலி மற்றும் வாய்க்கவசம் அணிவித்து இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

அதே போல் இந்த நாய்கள் என்று இல்லாமல் எந்த வகை வளர்ப்பு நாயாக இருந்தாலும் கழுத்துப்பட்டை அணிவித்து வெளியே அழைத்து செல்ல வேண்டும் என்றும் உரிமம் பெறாமல் நாய் வளர்ப்போருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இப்படியாக சென்னையில் நாய் வளர்க்க கெடுபிடிகள் உள்ள போதிலும் பல இடங்களில் விதிகளை மீறி தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ள நாய் வகைகளை வளர்த்து வருவது தெரிய வந்துள்ளது. அந்த வகையில் சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவர் தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ள 5 ராட்வீலர் நாய்களை வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வண்ணாரப்பேட்டை, கொத்தவால்சாவடி சாலையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் சவாரிக்காக சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது மனோகரன் வளர்த்து வரும் 2 ராட்வீலர் நாய்கள் திடீரென ஆட்டோ டிரைவின் கையைப் பிடித்து கடித்துள்ளன.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர் தப்பிச் செல்ல முயன்றும் அந்த நாய்கள் விடாமல் அவரை துரத்தி கடித்து குதறியுள்ளன. இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை நாய்களிடம் இருந்து மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பலத்த காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் மனோகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.