'தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்க கூடாது' - சத்குரு கோரிக்கை!

 
sadhguru


தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க கூடாது என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "குழந்தைகளுக்கு பட்டாசுகள் அளித்திடும் சந்தோஷத்தை மறுக்க காற்றுமாசு ஒரு காரணமல்ல. நீங்கள் அவர்களுக்காக செய்யும் தியாகமாக, 3 நாட்களுக்கு அலுவலகத்திற்கு நடந்து செல்லுங்கள். குழந்தைகள் பட்டாசு வெடித்து மகிழட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

sadhguru

அதில், நான் பட்டாசு வெடிப்பதை நிறுத்திவிட்டேன். பட்டாசு வெடித்து பல ஆண்டுகள் ஆகிறது. நான் சிறுவனாக இருந்தபோது பட்டாசு படிப்பது மிகவும் மகிழ்ச்சி கொடுக்கும் செயலாக இருந்தது. செப்டம்பர் மாதமே பட்டாசு பற்றிய கனவுகளை காண தொடங்கிவிடுவோம்.  தீபாவளிக்கு பிறகும் பட்டாசுகளை சேமித்து வைத்து தினமும் வெடித்து மகிழ்வோம். ஆனால் இப்போது சுற்றுச்சூழல் மீது திடீர் அக்கறை காட்டும் சிலர் பட்டாசு வெடிக்க கூடாது என்று கூறுகிறார்கள். அது சரியல்ல.


காற்று மாசுபாடு பற்றி கவலைப்படும் நீங்கள் பட்டாசு வெடிக்கும் ஆனந்தத்தை தியாகம் செய்து விடுங்கள். பெரியவர்கள் வேண்டுமானால் பட்டாசுகளை வெடிக்காமல் இருந்து விடுங்கள். குழந்தைகள் பட்டாசு வெடித்து ஆனந்தமாக இருக்கட்டும். 3 நாட்களுக்கு வாகனங்களில் செல்வதற்கு பதிலாக நடந்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார். மேலும், அவரது தீபாவளி வாழ்த்து செய்தியில்,  அன்பிலும் ஆனந்தத்திலும் விழிப்புணர்விலும் நீங்கள் ஒளிர்வது உங்களை இருளில் தள்ளிய இக்கட்டான கால கட்டங்களில் மிக அவசியம். இந்த தீபாவளித் திருநாளில் உங்களது மனிதத் தன்மையை அதன் முழு சிறப்புடன் ஒளிரச் செய்திடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.