சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

 
tn

குறுகிய மனம் படைத்த சிலரது சதியால் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கிடைக்காமல் போய்விட்டது என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தகைசால் தமிழர் - விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா மறைவுக்கு  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள  இரங்கல் செய்தியில், தகைசால் தமிழர் முதுபெரும் பொதுவுடைமைப் போராளி - விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா அவர்கள் மறைந்த செய்தியால் துடிதுடித்துப் போனேன். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் விரைந்து நலம் பெற்று விடுவார் என்றே நம்பியிருந்த வேளையில் அவர் மறைந்த செய்தி வந்து அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்தது.

tn

மிக இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, 102 வயது வரை இந்திய நாட்டுக்காகவும், உழைக்கும் வர்க்கத்துக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் வாழ்ந்து மறைந்த தோழர் சங்கரய்யா அவர்களின் வாழ்க்கையும் தியாகமும் என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவராக இருந்தபோதே விடுதலை வேட்கையோடு மாணவர் சங்கச் செயலாளராகப் போராட்டங்களை முன்னெடுத்தவர் தோழர் சங்கரய்யா அவர்கள். அவரது தேசியம் சார்ந்த செயல்பாடுகளால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டு படிப்பைத் துறந்தவர். இந்தியா விடுதலை பெறுவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்னர்தான் அவர் விடுதலை செய்யப்பட்டார். இப்படிப்பட்ட விடுதலைப் போராட்ட வீரருக்கு 2021-ஆம் ஆண்டு விடுதலை நாளினை முன்னிட்டு நேரில் சென்று முதல் ‘தகைசால் தமிழர்' விருதை வழங்கியது எனக்குக் கிடைத்த வாழ்நாள் பேறு! விருதோடு கிடைத்த பெருந்தொகையைக் கூட கொரோனா நிவாரண நிதிக்காக அரசுக்கே அளித்த தோழர் சங்கரய்யா அவர்களின் மாண்பால் நெகிழ்ந்து போனேன்.

tn

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் தோழர் சங்கரய்யா அவர்களின் மறைவு எப்போதும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது அனுபவமும் வழிகாட்டலும் இன்னும் சில ஆண்டுகள் கிடைக்கும் என எண்ணியிருந்த எனக்கு அவரது மறைவு தனிப்பட்ட முறையிலும் பேரிழப்பு. சாதி, வர்க்கம், அடக்குமுறை, ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடிய போராளி சங்கரய்யாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், பொதுவுடைமை இயக்கத் தோழர்கள், பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.விடுதலைப் போராட்ட வீரராக, சட்டமன்ற உறுப்பினராக, அரசியல் கட்சித் தலைவராக அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்  என்று குறிப்பிட்டுள்ளார்.