"முடிஞ்ச கல்யாணத்துக்கு ஏன் மேளம் வாசிக்கணும்?"-டிடி நெக்ஸ்ட் லெவலில் பாடல் நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு சந்தானம் பதில்
நடிகர் சந்தானம் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களோடு பார்ப்பதற்காக சென்னை வடழனியில் உள்ள கமலா திரையரங்கிற்கு நடிகர் சந்தானம் அவரது குடும்பத்தினர் மற்றும் பட குழுவினரோடு வருகை தந்தார். ரசிகர்களுடன் படம் பார்த்த பின் நடிகர் சந்தானம்,மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சந்தானம், “டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் புக்கிங்கில் நெக்ஸ்ட் லெவல் போய்க்கொண்டிருக்கிறது. மக்களை சிரிக்க வைப்பது மட்டுமே என்னுடைய நோக்கம். மக்கள் போரடிக்காமல் சந்தோஷமாக படம் பார்த்துவிட்டு செல்ல வேண்டும். அதற்காகவே நான் படம் பண்ணுகிறேன். இவ்வளவு அன்பு தந்த எனது ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நன்றி!” என்றார்.
சூரி, சந்தானம், யோகி பாபு என மூன்று காமெடி நடிகர்களும் ஒரே நேரத்தில் கதாநாயகராக நடித்து இன்று படங்கள் வெளியாகிறது என்ற கேள்விக்கு, நல்ல படமாக இருந்தால் யார் வேண்டுமானாலும் யாருடனும் போட்டி போடலாம். டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் இடம்பெற்ற கிசா 47 பல்வேறு சர்ச்சைக்கு பிறகு நீக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, முடிந்த கல்யாணத்திற்கு எதற்கு மேளம் என்ற காமெடி போல முடிந்ததைப் பற்றி பேச வேண்டாம் என சந்தானம் பதில் அளித்தார். மேலும் மக்கள் படத்தை ரசித்து பார்ப்பதற்காகவே படத்தை எடுத்துள்ளோம், மக்களும் படத்தை வரவேற்பு வருகின்றனர்...அதைப் பற்றி பேசுவோம் என்றார்.


