“விஜய்க்கு கொள்கை, கோட்பாடு கிடையாது! எதிர்ப்பு அரசியலை தான் செய்கிறார்”- சரத்குமார்
நானும் உச்ச நடிகர் ஆக இருக்கும்போது தான் அரசியலுக்கு வந்தேன். கொள்கை கோட்பாடு இல்லாமல் எதிர்ப்பு அரசியலை மட்டுமே விஜய் கையில் எடுத்துள்ளார் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் பேட்டியளித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமார், பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், “இன்னும் ஒரு மாத காலத்திற்குள் கூட்டணி அமைந்து விடும் என்று நிச்சயமாக என்னால் கூற முடியும். நான் பொறுப்பாக செயல்பட்டு வருகிறேன். பதவிக்காக இங்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்ய தான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கொள்கை கோட்பாடுகள் இல்லாமல் எதிர்ப்பு அரசியலை மட்டுமே கையில் எடுத்துள்ளார். அவர் என்ன செய்யப் போகிறார் என்று இதுவரை தெளிவாக கூறவில்லை. ஆட்சி அமைப்போம் என்று எல்லாரும் தான் கூறுவார்கள்.
நாட்டாமை குடும்பத்தார் என்பது பதவிக்காக காத்துக் கொண்டிருக்கும் நாட்டாமை குடும்பத்தார் என்ற அர்த்தம். சூரியவம்சம், நாட்டாமை என்ற வெற்றிப் படங்களை கொடுத்த பிறகு தான் நானும் அரசியலுக்கு வந்தேன். நானும் உச்ச நடிகர் ஆக இருக்கும்போது தான் அரசியலுக்கு வந்தேன். கூட்டம் வந்தால் அது ஓட்டாக மாறும்னு நினைச்சுட்டு இருந்தா அந்த எண்ணத்த மாத்திக்கோங்க... இதையெல்லாம் நானும், விஜயகாந்தும் எப்போவோ பாத்துட்டோம். Retirement-க்கு பிறகு நான் வரவில்லை. மதுரையில் எனக்கும்தான் மாபெரும் கூட்டம் கூடியது; அந்த காணொளி காட்சிகளை வேண்டுமானாலும் காட்டுகிறேன்” என்றார்.


