ஒரு பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லையா? அராஜகத்தின் உச்சம்- சரத்குமார்

 
’’தனிமனிதர் கூறும் கருத்துகளுக்கு பதில் கருத்தை கேட்காதீர்கள்’’- சரத்குமார்

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான செயல்களும் குற்றங்களும் அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சரத்குமார் தனது எக்ஸ் தளத்தில், “தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான செயல்களும் குற்றங்களும் அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. மக்கள் போராட்டத்தின் இடையே காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த செல்வதும், பிரச்சனைகளை சமாளிக்க முயல்வதும் இயல்பானது. அது போன்ற சூழலில் சீருடை அணிந்த பெண் காவல்துறை அதிகாரியை தலைமுடியைப் பிடித்து இழுப்பது, தாக்கமுயல்வது எல்லாம் அராஜகத்தின்  உச்சம்.

ஏற்கனவே அரசு நிகழ்வில், பாதுகாப்பிற்குச் சென்ற பெண் காவலர்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளானது, திருவண்ணாமலை கோவிலுக்குள் பெண் காவல்துறை அதிகாரியை மக்கள் முன்னிலையில் கன்னத்தில் அறைந்தது என பல தகாத செயல்கள் நடைபெற்ற பிறகும் கடும் நடவடிக்கைகளோ தண்டனைகளோ இல்லாத காரணத்தால் தான் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறுகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் அரசியல் பின்னணி காரணமாக எளிதில் தண்டனைகளில் இருந்து தப்பித்து விடுகின்றனர். ஆனால் ஒரு பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லையா, அவர்களுக்கு  எதிரான செயல்களுக்கே நடவடிக்கை இல்லையா என்பன போன்ற கேள்விகள் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது.

தேவைப்பட்டால் விஜயகாந்த் உடன் கூட்டணி: சரத்குமார் வியூகம்

அரசும் காவல் துறை உயர் அதிகாரிகளும் இந்த விஷயத்தில் உடனடி கவனம் செலுத்தி, குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் , சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பையும் மரியாதையையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.