வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக்கூடாது! அண்ணாமலைக்கு சசிகலா அட்வைஸ்
தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் பெரியாரின் படத்துக்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தனது ஆதரவாளர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, “பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்றிணைக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன். அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். நேற்று வரை ஒரு வேலையில் இருந்து விட்டு இன்று அரசியலுக்கு வந்து, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது. அரசியலை சிலர் விளையாட்டுத்தனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அனுபவங்களால் அரசியலில் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியது இருக்கிறது. அதை விட்டுவிட்டு ஏதோ வந்தோம் பேசுகிறோம் என்று அரசியல் செய்யக்கூடாது.
சனாதன விவகாரத்தில் எந்த சர்ச்சைக்கும் வேலை இல்லை. எந்த தெய்வமும் யாரையும் பிரித்து வைக்கவில்லை. சனாதன பிரச்சனையை விட்டுவிட்டு மக்கள் பிரச்சனையின் மீது கவனம் செலுத்தவேண்டும். ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு பிரச்சனையை திமுக அரசியல் தூண்டிவிடுகிறது என்பதைபோலத்தான் இதை நான் பார்க்கிறேன். காவிரி விவகாரத்தில் நீதிமன்றத்தில் நமது தரப்பு வாதங்களை ஆணித்தரமாக எடுத்துரைத்து தண்ணீரை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.