கனமழை காரணமாக ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ரத்து - சசிகலா

 
sasikala

கனமழை காரணமாக மெரினாவில் உள்ள அம்மா நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற இயலாத சூழ்நிலை இருப்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்

இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள பதிவில், வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இது மேலும் வலுவடைந்து அதிதீவிர புயலாக மாறி நாளை முற்பகலில் கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  இந்நிலையில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் சென்னை முழுவதும் தண்ணீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போய்விட்டது.  


இந்நிலையில், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு நாளை 05-12-2023 அன்று மெரினாவில் உள்ள அம்மா நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற இயலாத சூழ்நிலை இருப்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய அசாதாரண சூழ்நிலையில், கழக தொண்டர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, யாரும் வெளியூரிலிருந்து சென்னைக்கு வருவதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

எனவே, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நாளைய தினம் கழகத்தொண்டர்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த பற்றும், பாசமும் கொண்ட அனைவரும் அவரவர் இருக்கும் இடங்களிலேயே அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.