ஆசிய விளையாட்டு போட்டியில் 10 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை - சசிகலா வாழ்த்து

 
sasikala

இந்திய வீராங்கனை ரமிதா ஜிண்டால் வெண்கலம் வென்று சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சசிகலா தனது சமூகவலைத்தள பக்கத்தில், 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர்கள் ருத்ரான்க்‌ஷ் பாட்டீல், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், திவ்யன்ஷ் சிங் பன்வார் அடங்கிய குழு தங்கம் வென்றுள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இதில் முந்தைய உலக சாதனையை முறியடித்து, தற்போது 1893.7 புள்ளிகள் பெற்று இந்திய வீரர்கள் புதிய உலக சாதனை படைத்துள்ளது மிகவும் பெருமையளிக்கிறது.

sasikala

மேலும், 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கிவைத்த நமது வீராங்கனைகள் ரமிதா ஜிண்டால், மெகுலி கோஷ், ஆஷி சோக்சி ஆகியோர் அடங்கிய அணிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். அதேபோன்று 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிப்பிரிவில் இந்திய வீராங்கனை ரமிதா ஜிண்டால் வெண்கலம் வென்று சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 

அதேபோன்று ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமருக்கு வெண்கலப் பதக்கமும், 25 மீ துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவர் அணிக்கு மற்றுமொரு வெண்கலப் பதக்கமும் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், ஆடவர் லைட்வெயிட் இரட்டையர் துடுப்புப் படகுப் போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் லால் ஜாட், அரவிந்த் சிங் ஜோடி வெள்ளிப் பதக்கமும், 8 பேர் கொண்ட இந்திய அணி மற்றொரு துடுப்புப் படகுப் போட்டியில் வெள்ளிப்பதக்கமும், அதேபோன்று, 4 பேர் கொண்ட துடுப்புப் படகுப் போட்டியில் கலந்துகொண்ட இந்திய அணிக்கு வெண்கலப்
பதக்கமும், மற்றொரு துடுப்புப் படகுப் போட்டி இரட்டையர் பிரிவில் பாபு லால் யாதவ் மற்றும் லேக் ராம் ஆகியோருக்கு வெண்கலப் பதக்கமும், துடுப்பு படகு போட்டி ஆடவர் நாற்கர ஸ்கல்ஸ் பிரிவில் மேலும் ஒரு வெண்கலப் பதக்கமும் வென்று இருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

sasikala

ஆசிய விளையாட்டு போட்டியில் தற்போது வரை ஒரு தங்கம் உள்பட 10 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 6வது இடத்தை பெற்று இந்தியா முன்னேறிக்கொண்டு இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், நடைபெறவுள்ள இதர போட்டிகளிலும் நமது இந்திய வீரர்கள், வீராங்கனைகள் வியத்தகு சாதனைகள் படைத்திட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.