உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள் - சசிகலா

 
sasikala

உழைக்கும் கரங்களின் ஒற்றுமையையும், உறுதியையும் பறைசாற்றும் நாளாக கொண்டாடப்படுகின்ற இந்த 'மே தின' நன்னாளில் உலகெங்கிலும் வாழும் உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த "மே தின" நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என சசிகலா கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு உலகளாவிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்நாள் நாடுகளின் எல்லைகளைக் கடந்து உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் உரித்தான நாளாகக் கொண்டாடப்படுகிறது. மனித நாகரீகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய தொழிலாளர்கள், எட்டு மணி நேரம் மட்டுமே வேலை நேரம் என்பதனை தங்களுடைய உரிமையாக போராடிப் பெற்ற நாளே, 'தொழிலாளர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. புரட்சித்தலைவர் அவர்கள் "உழைப்பவரே உயர்ந்தவர்" என்றுதான் எழுதி கையெழுத்து போடுவார். அதற்கு மிக முக்கிய காரணம் அவர் உழைப்பின் வலிமையை அறிந்தவர். திரைப்படத்துறையில் நடித்துக்கொண்டு இருந்த காலத்திலேயே உழைக்கும் வர்க்கத்தின் பெருமைகளை எடுத்து சொல்லும் விதமாக புரட்சித்தலைவர் அவர்கள் அதனை பாட்டாகவும், காட்சியாகவும் தனது படங்களில் எடுத்துரைத்து அனைவரது மனதிலும் பசுமரத்தாணிபோல் பதிய செய்தார். 

பாடியதோடு இருந்துவிடாமல் முதல்வர் பதவியில் அமர்ந்ததும், உழைப்பாளர்கள் மேன்மை அடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி அவர்கள் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றினார். அதிலும் குறிப்பாக, 1984ஆம் ஆண்டு போக்குவரத்து தொழிலார்களது வாரிசுகளின் நலனைக் கருத்தில் கொண்டு ஈரோட்டில் சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி புரட்சித்தலைவர் அவர்களால் நிறுவப்பட்டதையும், 1992-ஆம் ஆண்டு ஐ.ஆர்.டி.டி.மருத்துவக்கல்லூரி புரட்சித்தலைவி அம்மா அவர்களால் உருவாக்கப்பட்டதையும் இந்நன்னாளில் பெருமிதத்தோடு எண்ணிப்பார்க்கிறேன். மேலும், நம் அம்மா அவர்களும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திடும் வகையில் எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தியதையும், உழைக்கும் வர்க்கத்தினர் என்றென்றும் நினைவில் கொண்டு மகிழ்ச்சியடைகின்றனர். நாட்டின் வளர்ச்சிக்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைத்திடும் தொழிலாளர்கள், எல்லா வளங்களும், நலன்களும் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என்று வாழ்த்தி, எனதருமை தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த "மே தின" நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.