அனைவரது வாழ்விலும் இன்பம் பொங்கிட பொங்கல் வாழ்த்துக்கள் - சசிகலா

 
sasikala

உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையோடு மகிழ்ந்து கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் தமிழர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என சசிகலா குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏர் முனைக்கு நேர் இங்கு எதுவும் இல்லை” என்ற வாக்கிற்கு இணங்க உழவுத் தொழிலை விட மகிமையான தொழில் உலகில் வேறெதுவுமில்லை. இத்தகைய சிறப்புமிக்க உழவுத் தொழிலை போற்றிடும் வகையில் பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடி மகிழ்கின்றனர். இந்நன்னாளில் மக்கள் தங்கள் இல்லங்களில் வண்ணக் கோலமிட்டு, கொத்து மஞ்சள் குலைகள் கட்டி தித்திக்கும் கரும்பு, காய்கறிகள், பழங்கள் முதலியவற்றை படையலிட்டு, புதுப்பானையில் அரிசியிட்டு, பால் ஊற்றி அது பொங்கி வரும் போது "பொங்கலோ பொங்கல்" என்று மகிழ்ச்சிக் குரல் எழுப்பி இறைவனை வழிபடுவார்கள். மேலும், உழவர் பெருமக்கள் தமது வேளாண் நிலங்களில் சாகுபடி செய்யும் விளைப் பொருட்களின் உற்பத்திக்கு ஆதாரமாக விளங்கும் இறைவனை வணங்கியும், தம்மோடு சேர்ந்து உழைத்து தம் வருமானத்திற்கு அச்சாரமாக திகழ்கின்ற கால்நடைகளுக்கு தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் நாளாக தைத்திருநாளினை கொண்டாடி மகிழ்கின்றனர்.

sasikala

"கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி முன்னேற்ற பாதையிலே மனச வைத்து முழு மூச்சாய் அதற்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் குணம் உடையோன் விவசாயி" என்று நம் புரட்சித்தலைவர் தன் பாடலின் மூலம் விவசாயிகளின் பெருமைகளை நாட்டிற்கு உணர்த்தினார் அதேபோன்று புரட்சித்தலைவி அம்மா அவர்களும் விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்காக எண்ணற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். நம் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் உழவர் பெருமக்களுக்கு என்றென்றும் உறுதுணையாகவும், விவசாயத்தை அழிந்திடாமல் பாதுகாத்திடவும் நாம் அனைவரும், குறிப்பாக இளம் தலைமுறையினர் முன் வர வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், ஜாதி மதம் போன்ற வேறுபாடுகளின்றி, இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என்று அனைவராலும் ஒற்றுமையோடு சமத்துவப் பொங்கலாகக் கொண்டாடப்படுகின்ற இந்த அறுவடைத் திருநாளில் ஏற்றத் தாழ்வுகள் நீங்கவும், சகோதரத்துவம் தழைக்கவும். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக ஒற்றுமை ஓங்க மதநல்லிணக்கப் பொங்கலாய் நாம் அனைவரும் கொண்டாடுவோம். மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள், இடுபொருள் விலை உயர்வு, விவசாய கூலி உயர்வு, சாகுபடி செய்த பயிர்களுக்கு உரிய ஆதார விலை கிடைக்காதது போன்ற எண்ணற்ற இன்னல்களுக்கு மத்தியிலும் இந்த வேளாண் தொழிலில் ஈடுபட்டு, நம் அனைவருக்கும், உணவளிக்கும். உழவர் பெருமக்களுக்கு. மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்திடவும், அவர்களுடைய வாழ்வாதாரம் மென்மேலும் உயர்ந்திடவும் இந்நன்னாளில் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.


தைப் பிறந்தால் வழி பிறக்கும், தடைகள் அகலும், தலை நிமிரும், நிலை மாறும் இந்த தைத்திருநாளில், தமிழர் தம் வாழ்வில் வளம் பெற்றிட தமிழகத்தில் மக்களாட்சி விரைவில் மலர தமிழர் திருநாளாம் தைத் திருநாள் வழி வகுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்வதுடன், அனைவரது வாழ்விலும் இன்பம் பொங்கிட பசியும், பிணியும், பகையும் நீங்கிட நாட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலைத்திட பொங்கல் திருநாளை இனிதே கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியோடு உரித்தாக்கிக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.