2026 சட்டமன்றத் தேர்தலில் யார் தலைமையில் ஆட்சி அமையும்?- சசிகலா பேட்டி

 
sasikala

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடந்த தனது உறவினர் இல்ல திருமண விழாவில் சசிகலா கலந்து கொண்டார்.

sasikala

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “வடகிழக்கு பருவமழை காரணமாக  தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்  சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்ததை கண்டு விவசாயிகள் வேதனையில் இருந்து வருகின்றனர்.  சேதம் அடைந்த பயிர்களை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு நேர்மையான முறையில் உரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் பாகுபாடின்றி உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்து இழப்பீட்டுத் தொகை பெறாத விடுப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

2026 சட்டமன்றத் தேர்தலில் யார் தலைமையில் ஆட்சி அமையும் என்பதை தமிழ்நாடு மக்கள் தான் முடிவு செய்வார்கள். தமிழக முதல்வர்  மாவட்டம் தோறும் கள ஆய்வுக்காக செல்வது தேவையற்றது. விளம்பர நோக்கத்திற்காக நடத்தப்படும் இது போன்ற கூட்டங்களினால் அதிகாரிகள் அலைக்கழிக்கப்படுவதோடு மக்கள் நலப் பணிகள் பாதிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்தது போல் சென்னையில் இருந்தவாறு மாநில முழுவதும் உள்ள அரசு அதிகாரிகளை இப்போதைய முதலமைச்சர் இயக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் ஏழை, எளிய மக்களுக்காக வழங்கப்பட்டு வரும் 20 கிலோ அரிசி பல ஊர்களில் குறைத்து வழங்கப்படுவது ஏற்புடையதல்ல. திமுக அரசின் தேர்தல் அறிக்கையில் கொடுத்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான பழைய ஓய்வூதிய திட்டத்தை பதவிக்கு வந்து மூன்று ஆண்டுகளை கடந்த நிலையிலும் இன்று வரை செயல்படுத்த தயங்குவது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.