“இபிஎஸ் நல்லவர் அல்ல! சிறையில் தினமும் எனக்கு நெருக்கடி கொடுத்தார்”- சசிகலா

 
ச்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் இன்று மாலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாள் விழாவில் சசிகலா கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதன்பின் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுடன் கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ண கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சியின் பெயரை விரைவில் அறிவிப்பதாகவும் சசிகலா கூறினார். 

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய சசிகலா, “எம்ஜிஆர் மறைவின்போது ராணுவ வாகனத்தில் இருந்து ஜெயலலிதாவை தள்ளிவிட்டபோது, நான் ஒரு `சபதம்' எடுத்தேன். ஜெயலலிதாவை முதலமைச்சர் ஆக்குவேன் என்று... ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல பிரச்சினைகள். ஜெயலலிதாவின் பிறந்த நாளில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. நிறைய விஷயங்களை சொல்ல வேண்டும் என இங்கு வந்துள்ளேன். நான் அரசியல்வாதியிடம் பழகுவதுபோல்  அம்மாவிடம் பழகவில்லை... என்னோட சொந்த உடன்பிறந்த அக்காவாக நினைத்து பழகினேன்

ஓபிஎஸ்-க்கு என்ன ஆச்சோ தெரியலை, தர்ம யுத்தம் என `அம்மா' நினைவிடத்தில் உட்கார்ந்து விட்டார். யார் பேச்சையோ கேட்டு ஓபிஎஸ் அப்படி செய்துவிட்டார். அந்த தர்ம யுத்தம் தான், இப்போது வரை ஓபிஎஸ்க்கு பிரச்சினையாக உள்ளது. பெயர் சொல்லி புகழும் அளவிற்கு இபிஎஸ் நல்லவர் அல்ல, பெங்களூரு சிறை சென்ற 2 மாதங்களில் தமிழ்நாட்டு சிறைக்கு மாறி கொள்ளலாம் என சில அமைச்சர்கள் கூறினார்கள். அமைச்சர்கள் சொன்னபடி நான் சிறை மாறியிருந்தால் இன்று நான் உங்கள் முன் பேசியிருப்பேனா என்பதே சந்தேகம். நான் மறுத்ததால் இங்கு வரவில்லை. அதிகாரிகளை கையில் போட்டுக்கொண்டு பெங்களூரு சிறையில் எனக்கு தினமும் நெருக்கடி கொடுத்தார் பழனிசாமி.  எடப்பாடி பழனிசாமி தன்னை மாற்றிக்கொள்வார் என 9 ஆண்டு காலம் காத்திருந்தேன். என் கணவரை பார்க்க பரோல் கேட்ட போது, தமிழக அரசிடமிருந்து பதில் வரவில்லை, 5 நாளுக்கு மேல் எனக்கு பரோல் தரக்கூடாது என எடப்பாடி பழனிசாமி சொன்னார். போதுமான அளவு முதுகில் குத்தினார்கள். தான் பார்த்து பதவியில் உக்கார வைத்தவர்கள், அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் ஈட்டியால் முதுகில் குத்தினார்கள்” என்றார்.


முன்னதாக பொதுக்கூட்டத்திற்கு அதிமுக கொடி கட்டிய வேனில் சசிகலா வந்தார். 2021ல் பெங்களூரு சிறையிலிருந்து அதிமுக கொடி கட்டிய சசிகலா வந்தது சர்ச்சையானது. கொடியை பயன்படுத்தக் கூடாது என அதிமுக சார்பில் டிஜிபியிடம் புகார் கொடுக்கப்பட்டிருந்தது.