திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- சசிகலா
தமிழகத்தில் வாக்களித்த மக்களை மனதில் வைத்து, இனியாவது சட்டம் ஒழுங்கை காப்பாற்றிட உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே தனியார் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும், இதில் மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருப்பதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக முதல்வரோ பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக மேடையில் பேசுகிறார். ஆனால் உண்மை நிலை என்னவென்றால் திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது முதல் பெண்களின் நிலையோ பாதுகாப்பின்றி மிகவும் அபாயகரமான சூழலில் வாழ்கின்ற நிலையில்தான் தமிழ்நாடு இருக்கிறது.
அதாவது கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே தனியார் பள்ளியில் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை என்.சி.சி. முகாம் என்ற பெயரில் போலியாக ஒரு முகாம் நடைபெற்றுள்ளதாகவும், இதற்காக 24 மாணவர்களும், 17 மாணவிகளும் பள்ளி வளாகத்திலேயே தங்க வைத்து, பயிற்சிகள் அளிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. இதில் கலந்துகொண்ட 13 வயதான 8ஆம் வகுப்பு மாணவி கடந்த 9-ம் தேதி அதிகாலை பள்ளி ஆடிட்டோரியத்தில் சக மாணவிகளுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த போலி பயிற்சியாளரான சிவராமன் என்பவர் மாணவியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பள்ளியின் முதல்வரிடம் மாணவி முறையிட்ட நிலையில், இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என அவர் கூறியுள்ளதாக தெரியவருகிறது. அதன்பிறகு கடந்த 16ஆம் தேதி மாணவிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட போதுதான் மாணவியின் பெற்றோருக்கு தனது மகளுக்கு நடந்த கொடுமை தெரியவந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட சிவராமன் ஏற்கனவே பல பள்ளிகளில் போலி முகாம் நடத்தி மேலும், 13 மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. போலி பயிற்சியாளர் சிவராமன் உள்ளிட்ட 11 நபர்களை தமிழக காவல்துறை கைது செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
தமிழகத்தில் இது போன்று பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட என்ன காரணம்? திமுக தலைமையிலான ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்து இருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகிறது. இவர்களது ஆட்சியின் லட்சணத்தை நன்கு அறிந்ததால்தான் சிவராமன் போன்ற நபர்கள் எந்தவித அச்சமுமின்றி தவறு செய்கின்றனர். திமுக ஆட்சியில் எப்படியும் தப்பித்துக்கொள்ளலாம் என்ற முழுநம்பிக்கையோடுதான் சிவராமன் போன்றவர்கள் முறைகேடுகளையும் அரங்கேற்றுகின்றனர். தமிழகத்தில் நடைபெறுகின்ற சட்டமீறல்கள், கொலை, கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அனைத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது கஞ்சா, போதைப்பொருட்கள் தான். தமிழகத்தில் நாளுக்கு நாள் கஞ்சா, போதை பொருட்களின் பயன்பாடு அளவுக்கு அதிகமாகி வருகிறது. இதையெல்லாம் கட்டுப்படுத்தவேண்டிய திமுக தலைமையிலான அரசோ கைகட்டி வேடிக்கை மட்டும் பார்க்கிறது. இதன்மூலம் தமிழக மக்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் மிகவும் கேள்விக்குறியாகி வருவது மிகவும் வேதனை அளிக்கிறது.
இதுபோல் மேற்கு வங்க மாநில தலைநகரில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில், பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்டு இருப்பது வேதனையின் உச்சமாக இருக்கிறது. மருத்துவப்பணி என்பது இறைப்பணிக்கு இணையானது. மானிட உயிர்களை காப்பற்றும் மனித தெய்வங்களாக விளங்கும் மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பினை வழங்க வேண்டிய பொறுப்பும், கடமையும் ஒவ்வொரு அரசுக்கும் உள்ளது. பெண் பயிற்சி மருத்துவர் உயிரிழந்ததற்கு காரணமான உண்மைகுற்றவாளிகளுக்கு கடுமையான தணடனையை மேற்கு வங்க அரசு பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேற்கு வங்கத்தில் ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்பட்டுள்ள பெண் பயிற்சி மருத்துவரின் குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றிய சக மருத்துவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக தலைமையிலான அரசு பர்கூர் தனியார் பள்ளியில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கும் விசயத்தில், வெளிப்படையான விசாரணையை மேற்கொண்டு, மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் வாக்களித்த மக்களை மனதில் வைத்து, இனியாவது சட்டம் ஒழுங்கை காப்பாற்றிட உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.