வைரி கண்மாயை சுத்தப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வருக - சசிகலா

 
sasikala

வைரி கண்மாயை சுத்தப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று சசிகலா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரத்தின் கழிவுநீரானது அருகில் இருக்கும் வைரிவயல் கிராமத்தில் உள்ள வைரி கண்மாயில் கலப்பதால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிப்படைந்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

sasikala

கழிவுநீர் கலப்பதால் வைரிவயல் கிராமத்தில் உள்ள குளம் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளதால் அந்த நீரை எதற்குமே பயன்படுத்தமுடியாத அவல நிலை நிலவுகிறது. இங்குள்ள கால்நடைகள் இந்த தண்ணீரை பருகினால் இறந்து விடுவதாக சொல்லப்படுகிறது. விவசாயம் செய்வதற்கும் இந்த குளத்தின் நீரை பயன்படுத்த முடியவில்லை என்றும், அவ்வாறு பயன்படுத்தினால் விவசாய நிலங்கள் வீணாகி விடுவதாக இப்பகுதி விவசாயிகள் சொல்லி மிகவும் வேதனைப் படுகின்றனர். மேலும் இந்த குளத்தில் இருக்கும் மாசடைந்த நீரால் அருகில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீரும் தற்போது முற்றிலுமாக பாதிப்படைந்துள்ளதாகவும், இதன் காரணமாக நிலத்தடி குழாய் மூலம் எடுக்கப்படும் தண்ணீரும் எதற்குமே பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக சொல்லி இங்குள்ள மக்கள் மிகவும் வேதனைப் படுகின்றனர்.

மேலும் இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில், அரசு அதிகாரிகள் விவசாயத்தை ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைக்க சொன்னதன் அடிப்படையில் இப்பகுதி விவசாயிகள் விவசாயமும் செய்ய முடியாமல், தற்போது அன்றாடம் சாப்பாட்டிற்கு ரேஷன் அரிசியை மட்டும் நம்பி தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றி கொண்டு வருவதாக சொல்லி மிகவும் வேதனைப்படுகின்றனர்.  

sasikala

எனவே, திமுக தலைமையிலான அரசு  தேர்தலை மட்டும் மனதில் வைத்து செயல்படுவதை விட்டுவிட்டு கொஞ்சமாவது மனசாட்சியோடு, வாக்களித்த மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்வதற்கு முயற்சி செய்யுங்கள். தமிழக மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள். வைரிவயல் கிராம மக்களின் நியாயமான கோரிக்கையான அறந்தாங்கி நகரத்தில் இருந்து வரும் கழிவு நீர் வைரி கண்மாயில் கலக்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். மேலும், வைரி கண்மாயை சுத்தப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுத்திட வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.