'ஜெயலலிதா சென்ற அதே வாகனத்தில்'... சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சசிகலா!

 
sasikala

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் விடுதலையாகி சென்னை திரும்பிய போது ஜெயலலிதா பயன்படுத்திய காரில் படை சூழ வந்தடைந்தார். வழி நெடுகிலும் ஆயிரக் கணக்கான தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். தொண்டர்கள் கூட்டத்திற்குள் மத்தியில் சசிகலா வந்த கார் திளைத்துப் போனது. இப்படி ஒரு வருகையை எவரும் எதிர்பார்க்கவில்லை. 

sasikala

சென்னை திரும்பிய பிறகு தேர்தலில் எல்லாம் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்த சசிகலா, தற்போது தனது சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார். முத்துராமலிங்கத் தேவரின் 114ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு  மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு சூழ்ந்திருந்த தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். தேவர் ஜெயந்தி விழா நாளை பசும்பொன்னில் நடக்கவுள்ளது. அதிமுக - அமமுக தொண்டர்களுக்கிடையே பிரச்சனை ஏற்படா வண்ணம் இன்றே மரியாதை செலுத்திவிட்டார் சசிகலா. 

முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக நேற்றே சசிகலா மதுரைக்கு வந்துவிட்டார். தஞ்சையில் இருந்து மதுரைக்கு சாலை மார்க்கமாக வந்த அவரை அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர். நேற்று இரவு ஹோட்டலில் தங்கிவிட்டு இன்று காலை ஹோட்டலில் இருந்து 'ஜெயலலிதாவின் பிரச்சார வாகனத்தில்' சசிகலா புறப்பட்டது அதிமுகவினரின் கவனத்தை ஈர்த்தது. அந்த வாகனத்தில் வந்து தான் அவர் மரியாதை செலுத்தினார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு தெப்பக்குளத்தில் மருது சகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.