சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி பலி.. 4 பேர் மீது பாய்ந்த வழக்கு..!!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கீழத்தாயில்பட்டியில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் பட்டாசு ஆலையில் இன்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து 4 முறை பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டதை அடுத்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல்கொடுக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வாகனங்கள் நிகழ்விடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இன்று ஞாயிற்றுக்கிழை பட்டாசு தொழிற்சாலை விடுமுறை என்பதால், உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் இருக்காது என கூறப்பட்டது. ஆனாலும், பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துச் சிதறுவதால் ஆலைக்கு அருகே நெருங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தீயை அணைக்கும் பணியிலும், மீட்பு பணியிலும் தாமதம் ஏற்பட்டது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த வெடி விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பணியில் இருந்த 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். காவல்துறையினர் அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலையின் உரிமையாளர் கனேசன், மேலாளர், 2 ஃபோர் மேன்கள் என 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் ஃபோர்மேன் லோகநாதன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


