சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்

 
savukku

குண்டர் சட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்.

சவுக்கு

குண்டர் சட்டத்தின் கீழான கைதுக்கு எதிரான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. இந்நிலையில் யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் கமலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக சவுக்கு சங்கர் அரசுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான விவரங்களும் தமிழ்நாடு அரசு சார்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே அரசு ஆவணங்களை முறைகேடாக தயாரித்தது அதை தவறாக பயன்படுத்தியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக வழக்குகளை எதிர்கொண்டவர் சவுக்கு சங்கர் இவர் தொடர்ச்சியாக இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார் என தமிழ்நாடு அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவரது தாயார் தொடர்ந்து வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கே அனுப்பி வைக்கப்பட வேண்டும் என  தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், இது சாதாரண சிவில் வழக்கு கிடையாது இது சட்டவிரோத தடுப்பு காவல் சட்டம் தொடர்பான வழக்கு இரண்டு மாதங்களுக்கு மேலாக சவுக்கு சங்கர் ஏன் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம் எனக் கேள்வி எழுப்பினர்.  தமிழக அமைச்சரவையில் இருந்த ஒருவர் குறித்து நான் பேசியதாக எனக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது ஆனால் தற்பொழுது அந்த அமைச்சர் பதவி இழந்து தற்போது சிறையில் இருக்கிறார் என செந்தில் பாலாஜி குறித்து மறைமுகமாக சவுக்கு சங்கர் தாயார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வாதடினார். மேலும் இது தனது உரிமை சார்ந்த விவகாரம் இதில் உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க அதிகாரம் இருக்கிறது என்றும் அவர் கூறினார். நீதித்துறை குறித்து எதுவும் தவறாக பேச மாட்டேன் என உறுதிமொழி அளிக்க தயாராக இருக்கிறேன் என சவுக்கு சங்கர் தயார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். 

supreme court

இதனைக் கேட்ட நீதிபதிகள், நாங்கள் ஏன் அவ்வாறு உறுதிமொழி தரச் சொல்லப் போகிறோம் எங்களை பொறுத்தவரை உறுதிப்படுத்தப்படாத எந்த தகவலையும் பேசக்கூடாது என்பதுதான் மிகவும் முக்கியமானது என பதிலளித்தனர். மேலும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு இடைக்காலப்பிணையை வழங்கினர். மேலும் இந்த பிணை உத்தரவு இந்த குறிப்பிட்ட வழக்கிற்கு மட்டும்தான் என்றும் மற்ற வழக்குகளுக்கு இது பொருந்தாது என்றும் குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவுக்கு எதிராக அவரது தாயார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கும் என்றும் நீதிபதிகள் தெளிவு படுத்தினர்.