கோவை சிறையில் எனது கையை உடைத்து விட்டார்கள்- சவுக்கு சங்கர்
கோவை சிறையில் எனது கையை உடைத்து விட்டார்கள் என சவுக்கு சங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்
மதுரை சிறையில் இருந்து விடுதலையான பின் செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர், “5 மாதங்களுக்கு பின் வெளியே வந்துள்ளேன். நான் வெளியே வர காரணமாக இருந்த நீதிமன்றங்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு நன்றி. திமுக என் மீது இரண்டு முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது. திமுக அரசின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டிய காரணத்துக்காக என் மீது பொய்யாக கஞ்சா வழக்கு போடப்பட்டது. காவல்துறையை பற்றி அவதூறாக பேசியதாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தமிழகம் முழுக்க போலீஸ் வாகனத்தில் அலைகழிக்கப்பட்டேன். கோவை சிறையில் எனது கையை உடைத்து விட்டார்கள். எனக்கு 3 இடங்களில் எலும்புகள் உடைந்தன. கையிலும் எலும்பு முறிவும் ஏற்பட்டது.
ஒவ்வொரு முறை கஸ்டடி எடுக்கும்போதும், திமுக அரசை எதிர்த்து எதுவும் பேசக்கூடாது, ஆதரவாக பேச வேண்டும் என காவல்துறை நெருக்கடி கொடுத்தது. ஏற்கனவே இருந்த வீரியத்துடன் செயல்படுவேன். எனது அலுவலகம் முடக்கப்பட்டுள்ளது. அதை நம்பியிருந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு பின்னர் சவுக்கு மீடியா செயல்படும். தமிழகத்தில் பத்திரிக்கை சுதந்திரம் துளியும் இல்லை” என்றார்.