கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு - சயானிடம் 2-வது நாளாக விசாரனை

 
sayan

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக சயானிடம் இரண்டவாது நாளாக காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில்  மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில் உள்ள ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு  கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் உதகை காவல்துறையினர் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். உதகை ஏ.டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் இந்த வழக்கு சம்மந்தமாக விசாரித்து வருகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், அரசுத்தரப்பு சாட்சியங்கள் என 220 பேருக்கும் மேல் இதுவரை  விசாரணை நடைபெற்றுள்ளது.  கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்த வழக்கில் சாட்சியங்களை மறைத்ததாக, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சேலத்தில் விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கார் ஓட்டுனரான கனகராஜின் சகோதரர் தனபால், அவருடைய உறவினர் ரமேஷ் ஆகிய இருவரை கூடுதலாக தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். 

Kodanadu

தற்போது இந்த வழக்கு சம்மந்தமான விசாரணை உதகையில் நடைபெறாமல்  கோவையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் முதல் நபராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சயானை மீண்டும் 2 வது முறையாக தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் ஐ.ஜி. சுதாகர் மேற்பார்வையில் நேற்று சுமார் 4 மணி நேரம் சயானிடம் விசாரணை நடைபெற்றது. இதுவரை விசாரணை மேற்கொள்ளப்பட்ட நபர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், சயானிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இரண்டாவது நாளாக சயானிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.