அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நாளை முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டம்!!
பள்ளி கட்டிடம் இடிப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

நெல்லையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் பள்ளி ஒன்றின் கழிவறை சுற்றுசுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவமானது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் , உடனடியாக சிதலமடைந்து பராமரிப்பு இன்றி உள்ள பழுதான பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட நிலையில் தரமில்லாத, சேதமடைந்து காணப்படும் பள்ளி கட்டடங்களை இடிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பழுதடைந்த வகுப்பறை கட்டடங்கள் இடிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பழுதான பள்ளி கட்டடங்களை இடிப்பது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார் . கூடுதலாக தேவைப்படும் வகுப்பறைகள், மாற்று இடம் , அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், பள்ளிகளில் பாலியல் புகார் பெட்டிகள் அமைப்பது குறித்தும் , பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு,காலாண்டு தேர்வு ரத்தான நிலையில்,திருப்புதல் தேர்வு எப்போது நடத்தலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


